சேலம் உருக்காலையை மத்திய அரசே நடத்த வேண்டும்: தர்மேந்திர பிரதானிடம் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்

சேலம் உருக்காலையை மத்திய அரசே தொடர்ந்து நடத்தக் கோரி தமிழக பாஜகவின் பொதுச் செயலர் வானதி ஸ்ரீனிவாசன் மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தில்லியில் புதன்கிழமை நேரில்
சேலம் உருக்காலையை மத்திய அரசே நடத்த வேண்டும்: தர்மேந்திர பிரதானிடம் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்


சேலம் உருக்காலையை மத்திய அரசே தொடர்ந்து நடத்தக் கோரி தமிழக பாஜகவின் பொதுச் செயலர் வானதி ஸ்ரீனிவாசன் மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார். இந்தச் சந்திப்பின் போது சேலம் உருக்காலைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
இது தொடர்பாக வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி: 
சேலம் உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், பங்கு விலக்கல் கொள்கையின்படி இந்த ஆலையின்பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இச்சூழலில், சேலம் உருக்காலையை லாபத்தில் இயங்க வைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.
குறிப்பாக, இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், இந்த மூலப்பொருள்களை வட இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யாமல், தமிழகத்திலேயே வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். 
மேலும், சேலம் உருக்காலையின் மார்க்கெட்டிங் துறையை தனியாக இயங்கச் செய்ய வேண்டும். சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்த ஆலையின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். 
அண்மையில் மூலப் பொருள்களின் விலையை மத்திய அரசு பெருமளவில் குறைத்துள்ளது என்றும், தென் இந்தியாவிலேயே தங்களது மூலப்பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும், மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை சேலம் உருக்காலையால் சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம். மேலும், சேலம் உருக்காலையின் பங்கு விலக்கல் நடவடிக்கையை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அப்போது, சேலம் உருக்காலைத் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் பங்கு விலக்கலுக்கு மாற்றாக இந்த ஆலையை லாபத்தில் இயங்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com