அந்நியச் செலாவணி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு

அந்நியச் செலாவணி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குற்றச்சாட்டுப்பதிவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு
அந்நியச் செலாவணி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு


அந்நியச் செலாவணி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குற்றச்சாட்டுப்பதிவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996-1997 ஆம் ஆண்டுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அந்நியச் செலாவணி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கில் சசிகலாவிடம் கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுப் பதிவின் போது, ஜெ.ஜெ. தொலைக்காட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சசிகலாவே பொறுப்பு என கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதிலும் பதிவு செய்யப்பட்டது. இதற்கு சசிகலா தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் ஜெ.ஜெ. தொலைக்காட்சியின் இயக்குநராக இருந்தேன். இதே நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்த வி.பாஸ்கரன் தான் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்படி இருந்த போது, இந்த நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் என் மீது சுமத்துவதை ஏற்க முடியாது என கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சாதிக் முகமது நைனார் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வி.பாஸ்கரன் இருந்தாலும், அந்நியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டில் சசிகலாவும், ஜெ.ஜெ தொலைக்காட்சி நிறுவனமும் பொறுப்புதான் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞர் ஹேமாவும், மனுதாரர் சசிகலா தரப்பில் வழக்குரைஞர் அசோகனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com