டெட் தேர்வில் தோல்வி: 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெட் தேர்வில் தோல்வி: 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்


டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு  சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில், 2011-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அறிமுகமானது.
 டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நிகழாண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு கால அவகாசத்தை நீட்டிக்க, மத்திய அரசு மறுத்து விட்டது. 

இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தி, ஏப்ரலில் தமிழகப் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் வழங்கியும், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 ஆயிரம் பேர் வேலைக்கு வர தயாராக உள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இதையடுத்து, 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க உத்தரவிட்டதோடு, ஜூனில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. 

குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி:  இந்தநிலையில் கடந்த ஜூனில்  நடந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.  இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அதாவது, இரண்டு தாளிலும் சேர்த்து, தேர்ச்சி பெற்றவர்கள் 900-க்கும் குறைவு என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அதிலும்  புதிய தேர்வர்களே அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள, 1,500 ஆசிரியர்களில்  மிகக் குறைந்த அளவில்தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களைத்  தவிர, மீதமுள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி கூடுதல் அவகாசம் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,  டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,500 ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வு மூலமாக மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.  ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிலும் தேர்ச்சி பெறவில்லை.  இது குறித்து கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com