டெல்டாவில் கடைமடை பகுதிகளுக்கும் காவிரி தண்ணீர்: வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்யகோபால்

டெல்டாவில் கடைமடைப் பகுதிகளுக்கும் காவிரித் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் வகையில், குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பகுதியில் புதிய கதவணை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார்  கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்யகோபால்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பகுதியில் புதிய கதவணை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார்  கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்யகோபால்.


டெல்டாவில் கடைமடைப் பகுதிகளுக்கும் காவிரித் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் வகையில், குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் கூடுதல் தலைமைச் செயலரும்,  வருவாய் நிர்வாக ஆணையருமான  கே.சத்யகோபால்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை பார்வையிடவும்,  முக்கொம்பில் அணை கட்டும் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் வெள்ளிக்கிழமை  வந்த அவர்,  ஆட்சியரகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் ஈடுபாட்டுடன் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கப் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  திருச்சி மண்டலத்தில் ரூ.109.8 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.93 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ. 230 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.66.08 கோடி என மொத்தமாக மாநிலத்தில் ரூ. 499.68 கோடியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 88 பணிகள் ரூ.12.75 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. குடிமராமத்துத் திட்டத்தைத் தவிர்த்து மேலும் 55 பணிகள் ரூ.4.5 கோடியில் நடைபெற்று வருகின்றன.
இதுமட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை மேம்படுத்தும் வகையில், சிறப்புப் பணிகள் திட்டத்தில் 281 பணிகள் ரூ.61 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.600 கோடியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், வேளாண் நிலங்களில் விவசாயிகளால் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் மீண்டும் 
புனரமைக்கப்பட்டு வருகின்றன.  இதுமட்டுமல்லாது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், நீராதாரத்துக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மாநிலத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை செப்.15-ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்கப்படும்.  பாசனக் கால்வாய்கள் புனரமைத்தல், பிரதான கால்வாயிலிருந்து பிரியும் பி, சி வாய்க்கால்கள் புனரமைப்புப் பணிகளும் இதே காலக் கட்டத்துக்குள் முடிக்கப்படும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைமடைப் பகுதிகளுக்கு நிகழாண்டு முழுமையாக தண்ணீர் கொண்டு சேர்க்கப்படும். தேவைப்படின் கடைமடைப் பகுதிகளுக்கான  குடிமராமத்துப் பணிகள் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படும். தண்ணீர் வரும் பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீராதாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறிப்பிட்டு ஏதேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் ரெகுலேட்டர் அமைத்து கடல் நீர் உள்புகாமலும், பாசன நீர் வந்து சேரவும் சிறப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, கடைமடைக்கு கட்டாயம் தண்ணீர் வந்து சேரும் என்றார்.
முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசுவுடன்  முக்கொம்பு மேலணையில் கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் காப்பணை, புதிய கதவணைப் பணிகளை  சத்யகோபால்  பார்வையிட்டார்.
அப்போது, திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு அலுவலர் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.
விடியோ, புகைப்படப் பதிவு குடிமராமத்துப் பணிகள், நீராதார மேம்பாட்டுப் பணிகளைக் கண்காணிக்கவும் அதன், தரத்தை உறுதி செய்யவும் கூடுதல் செயலர் பாலாஜி தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
பொறியாளர்கள், ஓய்வு பெற்ற பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் என 8 குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுவினர் ஒவ்வொரு பணிகளையும் தொடங்குவதற்கு முன்பிருந்து முடிவுறும் வரையில் பல்வேறு நிலைகளில் விடியோ, புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர். முதன்முறையாக இந்த நடைமுறை இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், பணிகள் குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட தரத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என்றார் கே. சத்யகோபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com