திமுக மெளனம் காக்கவில்லை: கே.எஸ்.அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக மெளனம் காக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திமுக மெளனம் காக்கவில்லை: கே.எஸ்.அழகிரி


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக மெளனம் காக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக மெளனம் காக்கவில்லை. மு.க.ஸ்டாலின்,   கைது  விவகாரத்தை கண்டித்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். ஓர் அரசியல் கட்சி அந்த அளவுக்குத்தான்  இந்த விஷயத்தில் தலையிட முடியும். காங்கிரஸ் தொண்டர் போல மு.க.ஸ்டாலின் எப்படிப் பேச முடியும்?
திமுகவுக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய நட்பு நேர்மையானது. அதனால், இந்த விவகாரத்தில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது குறித்து விமர்சிக்கப்படுகிறது. தலைவர்கள் அனைவரும் தில்லியில் இருந்தோம். ஆனால், காங்கிரஸ் போராட்டம் வெற்றிகரமான போராட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 
ப.சிதம்பரம் எதுவும் செய்யவில்லை. அவரால் தமிழகத்துக்கு அவமானம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. யாரால் தமிழகத்துக்கு அவமானம் என்பது உலகுக்குத் தெரியும். சிபிஐ வழக்கையும் சோதனையையும் சந்திப்பவர்கள் அதிமுக அமைச்சர்கள்தான். அதனால், மற்றவர்களை அவர்கள் குறை கூறுவது தவறான விஷயம்.
 இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ப.சிதம்பரம். 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை முதன்முதலில் காட்டியவர். மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கி, கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தியவர். ரூ.65 ஆயிரம் கோடிக்கும் மேலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக இருந்தவர். எனவே, எப்போதுமே பெருமைக்குரியவராகவே இருந்துள்ளார். ஒருவரைக் குற்றம்சாட்டுவதாலேயே அவர் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது.
பாஜகவின் தவறான கொள்கையை நிமிடத்துக்கு நிமிடம் எதிர்ப்பவராக சிதம்பரம் உள்ளார். அதனால்தான் பாஜகவால் அவர் குறி வைக்கப்படுகிறார் என்றார் அழகிரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com