நேரடி நெல் விதைப்பு: ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம்

விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடி நெல் விதைப்பு: ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம்

விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் சுமார் 43.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  இதில், மேட்டூர் அணையிலிருந்து  திறக்கப்படும் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்புப் பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 13-ஆம் தேதியும், கல்லணையிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதியும் பாசனத்துக்காக தண்ணீர்  திறந்து விடப்பட்டது. இந்நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  
விதைகள் கையிருப்பு: நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும்போது சுமார் 40 முதல் 45 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாள்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகிவிடும்.  இதனை முன்னெடுத்து செல்வதற்காக சிஆர் 1009, சிஆர் 1009 சப் 1,  கோ 50,  ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.   நடப்புப் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்க, ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்கவும்  உத்தரவிட்டுள்ளேன். அதன்படி,  5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், மானியம் வழங்குவதற்காக அதிமுக அரசு ரூ.30 கோடி  நிதி  ஒதுக்கீடு செய்துள்ளது. 
டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி  துணையோடு நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் மக்களும் மேற்கண்ட உழவு மானியத்தைப் பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com