பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு: கண்காணிப்புப் பணியில் 1.12 லட்சம் போலீஸார்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயில் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் ஏந்திய போலீஸார்.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயில் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் ஏந்திய போலீஸார்.


தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 1.12 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், மாநிலத்தில் போலீஸார் உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு முக்கியமான ஓர் எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அதில் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் - இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கோயம்புத்தூரில் தற்போது பதுங்கியிருப்பதாகவும் அந்த தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இந்துக்கள் போல நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் பொது இடங்களில் நடமாடக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி,  மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கும்படியும், அனைத்துப் பகுதிகளிலும் வாகனச் சோதனை, தீவிர கண்காணிப்பு, தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுமாறும் அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

 மக்கள் கூடும் இடங்களில்...: இதன் தொடர்ச்சியாக  மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல்  பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், தூதரகங்கள், முக்கியமான அரசு அலுவலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனர்.

ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்துப் பயணிகளும், அவரது உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டே உள்ள எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.


பாதுகாப்பு கருதி, ரயில் தண்டவாளங்களில் ரயில்வே போலீஸார் ரோந்து செல்கின்றனர். மேலும் மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபர்களின் கைரேகைகளையும், முகவரியையும் பதிவு செய்த பின்னரே அவர்களை காவல்துறையினர் விடுவிக்கின்றனர். இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 1.12 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையொட்டி அதி முக்கியமான இடங்களில் ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், அதிவிரைவுப் படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலோரத்தில் உஷார்:  கடலோரப் பகுதிகளிலும்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடும் நபர்களைக் கண்டறிந்து போலீஸார், விசாரணை செய்து வருகின்றனர்.
கடலோரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாருடன் கடலோரப் பாதுகாப்பு குழும காவலர்களும், கடலோரக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்: தமிழக-கேரள-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாநில போலீஸாரும் எல்லைகளில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இளைஞரிடம் விசாரணை: பயங்கரவாதிகள் ஊடுருவல் என்ற எச்சரிக்கையை அடுத்து நாகையை அடுத்துள்ள நாகூரில் சந்தேகத்தின்பேரில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை   நாகை நகர காவல் நிலையத்தில் வைத்து, காவல் உயர் அதிகாரிகள் 2 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர், அவர் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தமிழகத்துக்கு பயங்கரவாதிகள் குறி வைப்பது ஏன்?
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
முக்கியமாக காஷ்மீர் தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்ட உடன், மத்திய உள்துறை  ஓர்  எச்சரிக்கை தகவலை விடுத்தது. அதில், நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், பாஜக-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தது.  இதன் ஒரு பகுதியாக  பயங்கரவாதிகள் தமிழகத்துக்கு இப்போது ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது  என தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.
வட மாநிலங்கள் ஏற்கெனவே உச்சகட்ட பாதுகாப்பில் இருப்பதால், பயங்கரவாதிகளின் பார்வை தென்மாநிலங்கள் மீது விழுந்துள்ளன. கடந்த வாரம் பெங்களூருவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் விளைவாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இப்போது  பயங்கரவாதிகள் கோயம்புத்தூருக்குள் பதுங்கியிருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனால் தமிழக போலீஸாரும் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

சூலூர், உதகைக்கு குறி?
தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்கள் எனக்கூறி ஒரு பட்டியலை மத்திய உளவுத் துறை வெளியிட்டுள்ளது. 
அதில், நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம், உதகையில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, கோவை சூலூர் விமானப்படைத் தளம்,  கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் உள்ள சபரிமலை ஆலயம் மற்றும் சில வழிபாட்டுத் தலங்களைத் தாக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள வேளாங்கண்ணி தேவாலயத் திருவிழாவின்போது இத்தாக்குதலை அவர்கள் நடத்தக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மேற்கூறிய இடங்கள் அனைத்திலும் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

விழாக்களை குறிவைத்து தாக்குதல்?: தற்போது ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கும், இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளது என்றும், இவர்கள், திருவிழாக்களின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் குண்டுவைத்து தாக்குதல் நடத்தி பல நூறு பேரை ஒரே நேரத்தில் கொலை செய்ய முடியும் என்பதால் இவர்கள் இந்த முறையைப் பின்பற்றி வருகின்றனர் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

 கன்னியாகுமரி,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com