போஷன் அபியான் திட்டம்: சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழகத்துக்கு விருதுகள்

ஊட்டச்சத்து இயக்க (போஷன் அபியான்) திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு முதலிடத்திற்கான இரு
தில்லியில் தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் வி. சரோஜாவிடம் விருது மற்றும் ரூ.1.50 கோடிக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி  இரானி.
தில்லியில் தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் வி. சரோஜாவிடம் விருது மற்றும் ரூ.1.50 கோடிக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி  இரானி.

ஊட்டச்சத்து இயக்க (போஷன் அபியான்) திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு முதலிடத்திற்கான இரு விருதுகளும், இரண்டாமிடத்திற்கான ஒரு விருதும் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்கும் வகையில், போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்டம் 2018-இல் 11 மாவட்டங்களிலும், 2019-இல் 21 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டில் இத்திட்டத்தை பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் விருதுகள் வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக அரசுக்கு திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறை மாற்றம், சமுதாய நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒன்று திரட்டுதல் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அளவில் முதலிட விருதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், பொது மென்பொருள் பயன்பாடு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கினார். விருதுகளை தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி. சரோஜா பெற்றுக் கொண்டார். மேலும், விருதுக்கான ஊக்கத் தொகை முறையே ரூ.1 கோடி, ரூ.1.50 கோடி மற்றும் ரூ.50 லட்சத்துக்கான காசோலைகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர, களப் பணியில் தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு விருது, மாநில அளவில் நீலகிரி மாவட்டத்திற்கும், வட்டார அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் வட்டாரத்திற்கும் வழங்கப்பட்டது. களப் பணியில் சிறந்த அணிக்கான விருது ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டாரத்திற்கும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டாரத்திற்கும் கிடைத்தது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் சமூக நலத் துறைச் செயலர் சோ. மதுமதி, தமிழக தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தின் இயக்குநர் கவிதா ராமு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர்,

அமைச்சர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
போஷன் அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தில் குழந்தை பிறந்த 1,000 நாள்களுக்குள் குள்ளத் தன்மை, ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, எடை குறைவாக இருப்பது, ரத்தசோகை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் நோக்கத்தைச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்திய அளவில் குள்ளத் தன்மை வளர்ச்சி விகிதம் 37.4 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த விகிதம் 27.4 சதவீதம் என்ற அளவில் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 28 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்கும் வகையில், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயனாளிகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

ஊக்குவிப்பாக இருக்கும்: விருது பெற்றது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டம், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இம்மாவட்டத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை இருப்பது பொதுப் பயன்பாடு செயலி மூலம் சரியாகக் கண்டறியப்பட்டது. இதனால், பல்துறைகள் இணைந்து பயனாளிகளைச் சென்றடையும் நடவடிக்கைகள் போஷன் அபியான் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது விருது வழங்கப்பட்டிருப்பது மேலும் ஊக்குவிப்பாக இருக்கும் என்றார்.
சமூக நலத் துறைச் செயலர் மதுமிதா கூறுகையில், தமிழகத்துக்கு விருதுகள் கிடைத்திருப்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதேபோன்று விருதுகள் பெறத் தேவையான முனைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com