டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய எந்திரம்: பணியாளர்கள் பாதுகாப்புக்காக நடவடிக்கை 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய எந்திரம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய எந்திரம்: பணியாளர்கள் பாதுகாப்புக்காக நடவடிக்கை 

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய எந்திரம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதுமாக சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் வசூலாகும் பணத்தை பணியாளர்கள் வங்கி களுக்குச் சென்று செலுத்தி வருவதுதான் நடைமுறையாகி உள்ளது.

அவ்வாறு பணம் செலுத்தச் செல்லும் பணியாளர்களைத் தாக்கி பணம் கொள்ளை அல்லது டாஸ்மாக் கடைகளில் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் கூட கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த பேட்டப்பனூரில் உள்ள டாஸ்மாக் கடையில், கடைப் பணியாளரைக் கொலை செய்து, ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை களில் பணம் செலுத்த புதிய எந்திரம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் வசூல் செய்யும் பணத்தை நவீன பணம் செலுத்தும் இயந்திரங்களில் செலுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் இயந்திரத்தை பொருத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த எந்திரமானது சுமார் 200 கிலோ எடையிருக்கும். அவ்வளவு எளிதில் இதனை சேதப்படுத்த இயலாது.

இந்த இயந்திரத்தில் பணத்தை செலுத்த மட்டுமே முடியும்.

கொள்ளையர்கள், இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்துச் செல்ல முடியாத வகையில் இது வடிவமைக்கப்படும். எனவே ஊழியர்களுக்கும் பணியின் போது பாதுகாப்பு ஏற்படும்.

விரைவில் சோதனை அடிப்படையில் சில கடைகளில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படும்.

முடிவுகளைப் பொறுத்து முதற்கட்டமாக எத்தனை கடைகளில் பொருத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com