நெமிலிச்சேரியில் ரூ. 6.43 கோடியில் உவர்ப்பு நீரை குடிநீராக மாற்றும் திட்டம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெமிலிச்சேரியில் ரூ. 6.43 கோடியில் உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை


பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெமிலிச்சேரியில் ரூ. 6.43 கோடியில் உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 
   திருவள்ளூர் அருகே பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரியில் நீர் ஆதாரம் சேமிப்பு மற்றும் சேகரிப்பு குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். 
 இதில், அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது: மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டமான ஜல் சக்தி அபியான் திட்டத்தில், இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 255 மாவட்டங்களில், திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. இத்திட்டம் ஜூலை 1 முதல் நவம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வரும் 5 திட்டங்களில் கூடுதலாக இத்திட்டம் மூலம் நவம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. 
இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தாமரைக்குளம், அல்லிக்குளம் மற்றும் கிராமகுளம் ஆகிய குளங்களில் தூர்வாரி ஆழப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், ஏற்கெனவே சமூக காடு வளர்ப்புத் திட்டம் போன்றவை துரிதமாக செயல்படுத்தப்படும். இதில், நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ. 6.43 கோடியில் உவர்ப்புத் தண்ணீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது என்றார். 
   ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறுயது: 
திருவள்ளுர் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் மத்திய குழுத் தலைவர் உள்பட 8 உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் நெமிலிச்சேரி, நசரத்பேட்டை ஆகிய பகுதிகள் விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முன்பு தாய் திட்டம் மூலம் சிறு பாசன ஏரி, குளம், குட்டைகள் ஆகியவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டன. 
பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி ஆழப்படுத்தி, சுத்தம் செய்யும் பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நெமிலிச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சியில் உள்ள 3 குளங்களை தூர்வாரி சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டும்.  பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மூலம் மழைநீரை நிலத்தடியில் செலுத்தி, செறிவூட்ட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய நீர் மேலாண்மை குழுத் தலைவர் மம்தா சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கா.லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி வட்டத்தில்...
 பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர் மேலாண்மை குறித்து விவாதிப்பதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்தில், ஜல் சக்தி அபியான் எனும் நீர் மேலாண்மை திட்டத்தில், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் புனரமைத்தல், நீர்வடிப்பகுதி மேம்பாடு, காடு வளர்ப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம்,  கொண்டகரை வன்னிப்பாக்கம், அனுப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களை ஆய்வு செய்து, நீர் மேலாண்மை குறித்து விளக்கினார். 
 இதேபோல் சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், அருமந்தை, அழிஞ்சிவாக்கம், சோழவரம், ஆங்காடு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற நீர்மேலாண்மை குறித்த கிராம சபைக் கூட்டங்களை நேரில் ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com