மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.27) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் சாமானிய


ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.27) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் சாமானிய மக்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் எழுந்துள்ளது.
காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவர்களின் பிரதான கோரிக்கை. அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும்,  ஆனால் அக்குழு அளித்த பரிந்துரைகளைக் கூட அரசு ஏற்கவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. இதையடுத்து, அக்கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என பல்வேறு போராட்டங்களை அரசு மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது  அடுத்தகட்டமாக 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட உள்ளனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல்  வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குகின்றனர். 
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் மற்ற மாநிலங்களில் வழங்குவதைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.
ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.  எங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, தர்னா, ஒத்துழையாமை போராட்டம், புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு, கருப்புச் சட்டைப் போராட்டம் என பல்வேறு வகைகளில் எங்களது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதேபோன்று அரசு மருத்துவமனைகளின் வருவாயைக் குறைக்கும் வகையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பதையும் நிறுத்தினோம். 
இத்தனைப் போராட்டங்கள் நடத்தியும் எதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்துதான் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே தற்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன் நீட்சியாக வேலைநிறுத்தப் போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளோம்.
அதன்படி, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்க உள்ளோம். அதேவேளையில், அவசர சிகிச்சைப் பணிகளில் வழக்கம் போல மருத்துவர்கள் ஈடுபடுவர். இப்போராட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரதம்: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் 6 அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களில் இருவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அரசு மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களில் ரமா, நாச்சியப்பன் ஆகியோரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவ்விருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
திமுக, இடதுசாரிகள் ஆதரவு: அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று உண்ணாவிரதத்தில் பங்கேற்று வரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோரும் மருத்துவர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com