சம்பா நெல் சாகுபடிக்காகக் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் 

சம்பா நெல் சாகுபடிக்காகக் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பா நெல் சாகுபடிக்காகக் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் 

சென்னை: சம்பா நெல் சாகுபடிக்காகக் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 15 நாட்கள் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் சம்பா நெல் நடவுப் பணிகள் தொடங்கவில்லை. காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையாதது தான் இந்த தாமதத்திற்குக் காரணம் என்பதும், இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதும் வருத்தம் அளிக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதியும், ஒருபோக சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கிலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும். நடப்பாண்டில் குறுவைக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலையில், இயற்கையின் கொடையால் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தண்ணீர் திறந்து விட்டார். வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 10 நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளைத் தண்ணீர் சென்றடைவது வழக்கமாகும். ஆனால், இம்முறை 15 நாட்கள் ஆகியும் கடைமடை பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடையாததற்கு காரணம், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதும், கிளை ஆறுகள் முழுமையாகத் தூர்வாரப்படாததும் தான் என்று கூறப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி அல்லது 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தாலே அடுத்த சில நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடைந்து விடும். தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு இதே அளவு தண்ணீர்  திறக்கப்பட்டால் சம்பா சாகுபடி பணிகளை வெற்றிகரமாகத் தொடக்கி விடலாம். அதற்குப் பிறகு தண்ணீர் தேவை குறைந்து விடும் என்பதால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்கலாம். மேட்டூர் அணையிலும், கர்நாடக அணைகளிலும் இப்போதுள்ள தண்ணீரின் அளவையும்,  இனி கிடைக்கவுள்ள நீரின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது இது சாத்தியமான ஒன்று தான்.

அதுமட்டுமின்றி, அக்டோபர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி விடும் என்பதால் சம்பா சாகுபடிக்கு தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும். எனவே, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் தண்ணீர் திறக்க தயங்கத் தேவையில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் குறைந்தது 15 பருவ சாகுபடி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், குறுவை சாகுபடி முழுமையாகப் பொய்த்து விட்ட நிலையில், 4 பருவங்கள் மட்டுமே சம்பா சாகுபடி  நடைபெற்றுள்ளது. நடப்பு சம்பா பருவ சாகுபடி நிறைவாக நடந்தால் தான் விவசாயிகள் கடன் சுமையிலிருந்து ஓரளவாவது மீள முடியும். அதற்கு வசதியாக கடைமடை பாசன மாவட்டங்களுக்குத் தண்ணீர் சென்றடைய வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com