மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பிரச்னை: கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி

மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிப்பதாக செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தது.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பிரச்னை: கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி


மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிப்பதாக செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தது.
தமிழக மின்சார வாரியத்தில் சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். பணிநிரந்தரம் கோரி வந்த நிலையில், கேங்மேன் எனும் களப்பணியாளர்கள் இடத்தை உருவாக்கி அப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை மின்வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்த ஊழியர்கள் கேங்மேன் பணியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டது.  இருப்பினும் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த அளவே கால அவகாசம் இருந்தது. மேலும், ஒப்பந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் குறிப்பிடப்பட்ட  வயது வரம்பைக் கடந்திருந்ததால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது கேங்க்மேன் பணியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
நீதிமன்ற அவகாசம் முடிந்தது: முன்னதாக, இந்தப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையும் நிலையில், இறுதி நாளான செவ்வாய்க்கிழமை 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com