சீலநாயக்கனூரில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சீலநாயக்கனூரில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல்  ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சீலநாயக்கனூரில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சீலநாயக்கனூரில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல்  ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், தாளப்பள்ளம் காடு என்ற இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் சீலநாயக்கனூர் அமைந்துள்ளது.  இக் கிராமத்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பது குறித்து தகவலறிந்து, நல்லாம்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. அன்பழகன்,  சீலநாயக்கம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் கோ. திருப்பதி, அளேபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் த. பார்த்திபன், ஆ. அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில்,  அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அரியவகை தொல்லியல் சின்னங்களான இரண்டு பாறைக் கீறல் ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.  
இப் பாறை கீறல் ஓவியங்களை மேலாய்வு செய்த த. பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் கூறியது:
இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த பண்பாட்டுச் சின்னங்கள் ஆகும்.  இக் கீறல் ஓவியங்களில் ஒன்று குண்டுப் பாறையிலும் மற்றொன்று சமதளமாக உள்ள பாறையின் உயரமான முகப்பிலும் கீறப்பட்டுள்ளன.  இரண்டிலும் மாட்டின் உருவம் திமிலுடன் சற்று விரிந்து,  நீண்ட கொம்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.  இவற்றின் அழகிய வடிவமைப்பும், நேர்த்தியும் போற்றத்தக்க வகையில் உள்ளன.  தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட  காலத்தைச் சார்ந்த பாறைக் கீறல் ஓவியங்கள் கிடைத்துள்ளன.
இதில், சீலநாயக்கனூர் பாறைக் கீறல் ஓவியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.  இவற்றின் தன்மைகளுக்கு இணையான பாறைக் கீறல் ஓவியங்களை புகழ் பெற்ற புதிய கற்கால வாழிடமான கர்நாடக மாநிலம்,  பெல்லாரி வட்டத்தைச் சேர்ந்த குப்கல்-சங்கனக்கல் என்ற இடத்தில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்,  இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாடும்,  பெருங்கற்காலப் பண்பாடும் ஒன்றை அடுத்து ஒன்றும் கலப்புற்ற நிலையில்  உள்ளதும் அறியப்பட்டிருப்பதால்,  இவற்றின் காலத்தை இன்றைக்கு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கலாம்.  மேலும், தருமபுரி மாவட்டத்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன.
தாளப்பள்ளம் காட்டிலும், சீலநாயக்கனூரிலும் கல்வட்டம், கல்லறை, கல்திட்டை மற்றும் குத்துக்கல் வகை பெருங்கற்காலச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டன.  இங்குள்ள பெரும்பாலான கல் திட்டைகளும்,  கல்வட்டங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இதன் அருகில் மத்தளப்பள்ளம் என்ற சிற்றாறு ஓடுகிறது.  மலையும் மலை சார்ந்த இடமுமாக இருப்பதால்,  மேய்த்தல் தொழில் புரிந்த முல்லைத்திணை மக்கள் இங்கு நிறைந்து வாழ்ந்துள்ளனர்.  மேய்தல் தொழிலுக்கான மிகச்சிறந்த இடமாக இது விளங்கியுள்ளது.  இம் மக்களே இங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு, புதிய கற்காலப் பண்பாட்டுக்கும் முன்னேறியுள்ளனர் என்று இத் தொல்பொருள் சான்று உறுதி செய்கிறது.  இம் மக்களே இரும்புக் காலத்தில் பெருங்கற்காலச் சின்னங்களைப் படைத்துள்ளனர் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com