செஞ்சி அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்!

செஞ்சி அருகே கோயில் பகுதியில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், பழங்காலத்தில் அங்கு அகதிகள் முகாம் இருந்தது தெரிய வந்துள்ளது. 
செஞ்சி அருகேயுள்ள செவலப்புரை அகத்தீஸ்வரர் கோயிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு.
செஞ்சி அருகேயுள்ள செவலப்புரை அகத்தீஸ்வரர் கோயிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு.


செஞ்சி அருகே கோயில் பகுதியில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், பழங்காலத்தில் அங்கு அகதிகள் முகாம் இருந்தது தெரிய வந்துள்ளது. 
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செவலப்புரை கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் பகுதியில் பாண்டியர் கால கல்வெட்டுகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களுடன் கள ஆய்வு செய்து கண்டறிந்த விழுப்புரம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் த.ரமேஷ், த.ரங்கநாதன், முண்டியம்பாக்கம் ஜோதிபிரகாஷ் ஆகியோர் கூறியதாவது:
கோயில் பகுதியில் கண்டறியப்பட்ட இரு கல்வெட்டுகள் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலமான கி.பி.1312-இல் பொறிக்கப்பட்டவை. கோயிலில் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டில் இந்த ஊர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து சிங்கப்புர நாட்டு செவ்வலப்புரையூர் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சோழர் ஆட்சிக்குப் பிறகு, பாண்டியர் ஆட்சி ஏற்பட்டதையும், இந்தக் கோயில் அகத்தீசுரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டதையும்,  கோயிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியதையும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
இப்பகுதி மக்களுக்கு பாண்டியர் காலத்தில் விதிக்கப்பட்ட மரவடை, குளவடை, செக்கிறை, தட்டொலி, தட்டார் பாட்டம், புறவடை மற்றும் தறி இறை ஆகிய வரிகளை கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்ததையும், இந்த ஊரில் வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்கு நிலம் இருந்ததையும், அது திருவிடையாட்டம் என வழங்கப்பட்டதையும், கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது.
சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம், திருநாமத்துக்காணி என்ற பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதமான கொடையை வழங்க செஞ்சிமலைப் பற்றைச் சேர்ந்த ஜெயங்கொண்ட சோழபிரமாராயன், அகம்படி வேளான், காட்டுப்பள்ளி வேளான் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அஞ்சினான் புகலிடம் (அகதிகள் முகாம்): இந்தக் கோயிலின் வடக்குப்புற வயல்வெளி பகுதியில், மற்றொரு தனிக் கல்வெட்டு விழுந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு ராசநாராயணன் திருமல்லிநாதன் சம்புவராயர் காலத்தைச் சார்ந்ததாகும். அவரின் 19-ஆம் ஆட்சி ஆண்டான கி.பி.1356-இல் சோணாடு கொண்டான் திருவீதி என்ற பெயரில், அஞ்சினான் புகலிடம் ஏற்படுத்தி, அதை கோயில் காணிக்கையாக வழங்கியதாக இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
அதாவது, போருக்கு அஞ்சி தஞ்சம் அடைந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமிடமாக அது அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சி வந்தோருக்கு பாதுகாப்பு புகலிடமாக இருந்திருக்கலாம்.  தற்போதுள்ள அகதிகள் முகாம் போல இதைக் கருதலாம். இப்படி, போர்க்காலத்தில் தஞ்சமடைவோர், இங்கு தங்கி தங்களுடைய பாதுகாப்புக்கான வரியை செலுத்தவேண்டும், அந்த வரிப்பணம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.
சோணாடு கொண்டான் என்பது சோழநாட்டை வெற்றிகொண்டான் என்பது பொருள். இந்த சிறப்புப் பெயரின் அடிப்படையில், இந்த அஞ்சினான் புகலிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு கோயிலுக்குச் சொந்தமான வயல்வெளி பகுதியில் நடப்பட்டுள்ளது. எனவே, இங்குதான் அஞ்சினான் புகலிடம் அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற அஞ்சினான் புகலிடம் கல்வெட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஜம்பை போன்ற பகுதியிலும் ஏற்கெனவே கிடைத்துள்ளது. இந்தப் பகுதிகள் அந்தக் காலத்தில் எல்லைப் பகுதிகளாக இருந்து, அஞ்சினான் புகலிடமாக ஆக்கப்பட்டிருக்கலாம். கோயிலில் கிடைத்துள்ள இந்தப் புதிய கல்வெட்டுகள் மூலம் பாண்டியர் கால ஆட்சி இப்பகுதியில் பரவி இருந்ததையும், சம்புவராயர் ஆட்சிக்காலத்தில், இந்த ஊரில் அகதிகள் முகாம் இருந்ததையும் அறியமுடிகிறது என்றனர்.

வயல் வெளியில் கண்டறியப்பட்ட மற்றொரு கல்வெட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com