தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மூலையையும் பாஜக சென்றடையும்: திமுகவுக்கு முரளிதர ராவ் சவால்

அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்" பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்" பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். 

பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்று (சனிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்" என்கிற பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளவுள்ளது. ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்த பிரசாரத்தின்போது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கான முடிவில் இருக்கும்,  மத்திய அரசின் நிலைப்பாடு, வாதங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். 

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2000 பேரை கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். அவர்களிடம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான நோக்கம் எடுத்து விளக்கப்படும். அவர்கள், அவர்களது பகுதியில் இருக்கும் மக்களிடம் இதுகுறித்து எடுத்துரைப்பார்கள். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க சட்டரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் தமிழகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களைச் சென்றடைவோம் என்று திமுகவுக்கு சவால் விடுக்கிறோம்.         

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களால் இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் மக்கள் பலன் பெறுவதுபோல் காஷ்மீர் மக்களும் பலன் அடைய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், நல்லாட்சி, இடஒதுக்கீடு உள்ளிட்டவை தேவைப்படுகிறது. 

நீண்ட காலமாக பாஜக எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. ஆனால், இந்தியா போரில் ஈடுபட்டிருக்கும்போது நாங்கள் எந்த கருத்தும் கூறியதில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஐ.நா. வில்  இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தில் பயன்படுத்தியுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com