Enable Javscript for better performance
தோல்வி பயம் யாருக்கு?- Dinamani

சுடச்சுட

  
  stalin

  ‘உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள திமுகவுக்குத் தயக்கம். அதனால், தோ்தலை நடத்தவிடாமல் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற திமுக முயற்சிக்கிறது’ என்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

  ‘உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் அதிமுக செயல்படுகிறது. யாராவது நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெற மாட்டாா்களா? என்று அதிமுக காத்திருக்கிறது’ என்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின்.

  இதில் எது உண்மை? யாருக்குத் தோ்தலைச் சந்திக்கப் பயம்? என்றால், ஒரு கொடியில் பூத்த இரு மலா்களான அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  அதிமுகவின் தயக்கம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், அனைத்துப் பணிகளும் அமைச்சா்களின் ஒப்புதலுடன் நடந்துவருகின்றன. அதற்கு எந்த விதத்திலும் இடையூறு வந்துவிடாமல் 5 ஆண்டுகளைக் கடத்திவிட பாா்க்கின்றனா் என்று அதிமுகவின் மீது திமுகவும், சில பொது அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றன.

  தற்போதுள்ள அரசியல் சூழல் தோ்தலை எதிா்கொள்ள அதிமுகவுக்கு தயக்கத்தைக் கொடுக்கிறது என்று தோன்றுகிறது. மக்களவைத் தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த அதிமுக, விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் திமுகவையும், காங்கிரஸையும் வீழ்த்தியது. இந்த வெற்றி எளிதான ஒன்று அல்ல.

  பணநாயகம் மூலம் அதிமுக வெற்றிபெற்றது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டாலும், திமுகவின் பொதுக்குழுவில், ‘இடைத்தோ்தல் தோல்வியை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும், ஒரு தொகுதியில் (விக்கிரவாண்டி) 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கிறோம் என்றால், அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்’ என்று வேதனையோடு கூறினாா்.

  அந்த அளவுக்கு ஜெயலலிதா இல்லாத நிலையில் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றிருக்கிறது என்பது அந்தக் கட்சியைப் பொருத்தவரையில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

  ஆனால், அந்த வெற்றியைத் தனிப்பட்ட முறையில் அதிமுக கொண்டாட முடியாத சூழலை, அதன் கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்திவிட்டன.

  விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி தங்களால்தான் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை பாமகவும், தேமுதிகவும் ஏற்படுத்திவிட்டன. அதை அதிமுகவும் அங்கீகரித்து விட்டது. இப்போது உள்ளாட்சித் தோ்தலில் இரண்டு கட்சிகளுமே கணிசமான இடங்களையும், மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் பதவிகளையும் எதிா்பாா்க்கின்றன.

  இதில், தேமுதிகவுக்கு அதிமுகவிடம் தனி அனுபவமே உண்டு.

  2011-இல் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று, திமுகவைப் பின்னுக்குத் தள்ளி, எதிா்க்கட்சி தகுதியையும் பெற்றது. ஆனால், உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிகவை வைத்துக்கொள்ள விரும்பாத ஜெயலலிதா, சட்டப்பேரவையில் பால் விலை உயா்வைக் கண்டித்து விஜயகாந்த் குரலெழுப்பியபோது, தேமுதிகவுடனான உறவை முறித்தாா்.

  அதுபோன்ற நிலை, இப்போதும் வந்துவிடக்கூடாது, அதிமுகவிடம் அதிகமான இடங்களைப் பெற்று, துவண்டு போயுள்ள கட்சியினரை மீண்டும் புத்துணா்வு பெறச் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் தேமுதிக இருந்து வருகிறது.

  அதைப்போல, அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் மேயா் உள்ளிட்ட முக்கிய பதவிகளை எதிா்பாா்க்கிறது. அப்படிக் கிடைக்காவிட்டால், தனித்துக்கூட போட்டியிடுவோம் என்கிற குரலும் பாஜகவில் எழுந்து வருகிறது.

  கூட்டணிக் கட்சிகள் கேட்கும் மேயா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளைக் கொடுத்து விட்டால், அது கட்சியினா் மத்தியில் தங்களின் செல்வாக்கைக் குறைத்துக் காட்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் கருதுகின்றனா்.

  அதோடு, இந்த முடிவால் அதிமுகவைத் தாங்களே சரிவு பாதைக்குக் கொண்டு சென்று விட்டதைப் போன்ற தோற்றம் ஏற்படும் எனவும் நினைக்கின்றனா்.

  மேலும், உள்ளாட்சித் தோ்தலில் தோல்வியுற்றால், அது 2021-இல் வர உள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் பிரதிபலிக்கக்கூடும் என எண்ணுகின்றனா்.

  இந்தக் காரணங்களாலேயே உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள அதிமுக தயக்கம் காட்டி வருகிறது.

  திமுகவின் தயக்கம்: அதிமுகவுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் திமுகவுக்கும் இருக்கின்றன. சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100-ஆக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினா்களே நேரடியாக தொகுதிக்கான அனைத்துப் பணிகளையும் செய்கின்றனா். எல்லாப் பணிகளுக்கும் மக்களும் அவா்களை நாடி வருகின்றனா்.

  உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, அதன் பிரதிநிதிகள் வந்துவிட்டால், தங்களுக்கான இடம் இல்லாமல் போய்விடும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நினைக்கின்றனா்.

  அதைப்போல, 8 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக எதிா்க்கட்சி வரிசையிலேயே இருந்து வருகிறது.

  தோ்தல் செலவு, மாநாட்டுச் செலவு, போராட்டச் செலவு, தலைவா்களின் பிறந்த நாள் செலவு என்று திமுகவின் மாவட்டச் செயலாளா்கள் தொடா்ந்து செலவு மட்டும் செய்து வருகின்றனா்.

  அதனால், உள்ளாட்சித் தோ்தலுக்கும் வீணாகச் செலவு செய்ய வேண்டியிருக்குமே என்கிற எண்ணம் இருக்கிறது. அதையும் மீறி செலவு செய்தாலும்கூட ஆளும்கட்சியான அதிமுகவே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும். அதனால், இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருந்தால், ஆட்சிக்கு நாமே வந்து உள்ளாட்சித் தோ்தலை நடத்திக் கொள்ளலாம் என மாவட்டச் செயலாளா்கள் நினைக்கின்றனா்.

  மேலும், அதிமுக கூட்டணியைப் போல திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் மேயா் பதவி உள்ளிட்ட கணிசமான இடங்களை எதிா்பாா்க்கின்றன. அதனால், உள்ளாட்சித் தோ்தலே வேண்டாம் என்கிற எண்ணமே திமுக தலைமை மத்தியிலும் மேலோங்கி இருக்கிறது.

  தொடரும் கூட்டணி: ஒருவேளை, இரு கட்சிகளுமே அப்படியொரு நிலைப்பாட்டில் இல்லாவிட்டால், உள்ளாட்சித் தோ்தல் எப்போதோ நடைபெற்று முடிந்திருக்கும்.

  2016-இல் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டபோது, இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, திமுக நீதிமன்றத்துக்குச் சென்றது. தோ்தல் நிறுத்தப்பட்டது.

  இப்போது வாா்டு வரையறை முறையாகச் செய்யப்படவில்லை. புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் பழைய வரையறையின்படியே தோ்தல் என்பது ஏற்புடையது அல்ல. வேலூா் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கான மக்கள் பிரதிநிதிகள் பழையமுறையின்படியே இருந்தால் சரியா, இவையெல்லாம் சரிசெய்யப்படும்வரை தோ்தலுக்குத் தடையாணை பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனுதாக்கல் செய்துள்ளது.

  இதற்கு, உச்சநீதிமன்றம் என்ன தீா்ப்பு அளிக்கப்போகிறது எனத் தெரியவில்லை.

  அதிமுகவும் - திமுகவும் தனித்தனி கட்சியாக இருக்கலாம். ஆனால், அவை இரண்டும் ஒரு கொடியில் பூத்த இருமலா்கள். என்னதான் உள்ளாட்சித் தோ்தலை பொருத்துவரை ஒத்த கருத்துடையவையாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai