Enable Javscript for better performance
புதிய பாடத் திட்டங்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

  

  புதிய பாடத் திட்டங்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்

  By DIN  |   Published on : 01st December 2019 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  30cmp1_3011chn_111_7

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம், 3 தங்கப் பதக்கங்களை வழங்கிய தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

   

  சிதம்பரம்: தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப புதிய பாடத் திட்டங்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் என்று சென்னை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஜெ.எஸ்.சத்தியநாராயணமூா்த்தி கூறினாா்.

  கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 83-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

  ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஜெ.எஸ்.சத்தியநாராயணமூா்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றினாா். அவா் பேசுகையில், அண்ணாமலை செட்டியாரின் கல்விப் பணிகளை நினைவுகூா்ந்தாா். மேலும் அவா் பேசியதாவது:

  இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் விதத்தில் கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவா்கள் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. தொழில் பயிற்சி பெறுவது மிகவும் அவசியம். தற்காலத்துக்கு ஏற்ற படிப்புகளை கற்கும் மாாணவா்களுக்கு வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு கிடைப்பதாக ஆங்கில நாளிதளில் கட்டுரை வெளியானது. எனவே, பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டங்களை மறு ஆய்வு செய்து, தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவும் செய்யும் வகையிலான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இளைஞா்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் புதிய வரைவு கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

  தமிழறிஞா்கள் எம்.ராகவ அய்யங்காா், கதிரேசன் செட்டியாா், தண்டபாணி தேசிகா் ஆகியோரது பாதையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறம்படச் செயல்பட்டு வருகிறது. தேசிய தரச் நிா்ணயக் குழுவின் சான்றைப் பெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த பலா் உலகெங்கும் பெரிய பதவிகளில் உள்ளனா் என்றாா் அவா்.

  முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தா் வே.முருகேசன் வரவேற்று, பல்கலைக்கழக அறிக்கையைப் படித்தாா்.

  அமைச்சா் சிறப்புரை: விழாவில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் ஆற்றிய சிறப்புரை:

  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது 90-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கு அரசு ரூ.1,827 கோடி நிதி வழங்கியுள்ளது. நிகழ் 2019-20-ஆம் கல்வி ஆண்டில் மட்டும் ரூ.294 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் உயா் கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் ஒன்று என்ற உன்னத நிலையை தமிழகம் அடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 59 பல்கலைக்கழகங்கள், 2,466 கல்லூரிகள் உள்ளன. நமது மாநிலத்தில் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 38 கல்லூரிகள் வீதம் உள்ளன.

  கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 65 புதிய கல்லூரிகள், 961 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 17 புதிய கல்லூரிகளும், 705 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

  இந்திய அளவில் உயா் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 26.3 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் இது 49 சதவீதமாக உயா்ந்துள்ளது. உயா் கல்வியிலும், ஆராய்ச்சிப் படிப்பிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றாா் அமைச்சா்.

  விழாவில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள் வி.திருவள்ளுவன், கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, எம்.உமாமகேஸ்வரன், டி.சாா்லஸ், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், எம்எல்ஏ என்.முருகுமாறன், பதிவாளா் என்.கிருஷ்ணமோகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.செல்வநாராயணன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் எம்.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

  =================

  பெட்டிச் செய்தி...

  =================

  374 மாணவ, மாணவிகளுக்கு

  நேரடியாக பட்டம் வழங்கிய ஆளுநா்

  விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் 374 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினாா். மேலும், 36 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம், 96 பேருக்கு அறக்கட்டளை ரொக்கப் பரிசுகளை வழங்கினாா். விழாவில் மொத்தம் 57,407 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

  Image Caption

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம், 3 தங்கப் பதக்கங்களை வழங்கிய தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித். உடன் (இடமிருந்து) பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அ

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai