உடுமலை வனப் பகுதியில் சுற்றுலாத் திட்டம் தொடக்கம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சின்னாறு வனப்  பகுதியை சுற்றுலாத் தலமாக வனத் துறை அறிவித்துள்ளது.
சின்னாறு வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.
சின்னாறு வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சின்னாறு வனப்  பகுதியை சுற்றுலாத் தலமாக வனத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை நேரில் சென்று பார்வையிடும் வகையில்  சுற்றுலாத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகப் பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், புள்ளி மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்கினங்கள் வசித்து வருகின்றன. இந்த வனப் பகுதியில் அருவிகள், காட்டாறுகள், அரியவகை தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை எழிலுடன் கூடிய இடங்களும் உள்ளன. 
இந்நிலையில் வன விலங்குகளை வனப் பகுதிக்கே நேரில் சென்று பார்க்கவும், அங்குள்ள இயற்கை அழகை நேரில் கண்டு ரசிக்கவும் வனத் துறை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
அண்டை மாநிலமான கேரளத்தில் வருவாயைப் பெருக்கவும், வனப் பகுதிகளைப் பாதுகாக்கவும் எக்கோ டூரிசம் (சூழல் சுற்றுலா), பாரஸ்ட் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி (வன முன்னேற்ற சுற்றுலா) என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக அந்த மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள வன ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும், மாணவ, மாணவியரும் கேரளத்தைத் தேடியே செல்லும் நிலை உள்ளது. மேலும் அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு கேரள சுற்றுலாத் திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிகளில் வனத் துறை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்நிலையில் உடுமலை அருகே உள்ள சின்னாறு வனப்  பகுதியை சுற்றுலாத் தலமாக வனத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை நேரில் சென்று பாதுகாப்பாகப் பார்வையிட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 
இதன்படி, சுற்றுலாப் பயணிகளை சின்னாறு சோதனைச் சாவடியில் இருந்து கூட்டாறு வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைப்பயணமாக அழைத்துச் செல்லவும், பின் அங்கு கூட்டாற்றில் பரிசல் பயணத்துக்கும், வனப் பகுதியில் உள்ள சின்னாறு ஆற்றின் கரையோரத்தில் நடைப்பயணமாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்குவதுடன் ஒரு நாள் முழுவதும் இயற்கைச் சூழலில் இருக்கவும் வனத் துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 
அப்போது, இயற்கை வளம், வன விலங்குகள், பறவைகள், மரங்கள், வண்ணத்துப் பூச்சிகள், நீர்ப் பிடிப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிக் கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருவருக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய 04252-232523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சின்னாறு வனப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில் மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப், மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கே.கணேஷ்ராம், அமராவதி வனச் சரகர் முருகேசன் மற்றும் வனத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com