உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்?

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது என்று என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது என்று என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்தபோது தமிழகத்தின் சாா்பில், திமுகவின் தலைவா் என்ற முறையில் சென்றிருந்த எனக்கு மேடையில் நடுநாயகமாக அமரும் வாய்ப்பினைத் தந்தனா். அது தனிப்பட்ட எனக்கானது அல்ல. ஜனநாயகம் காக்கும் போரில் சமரசமின்றிப் பங்கேற்கும் திமுக எனும் மகத்தான பேரியக்கத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதை.

மாநிலக் கட்சியான திமுக எனும் பேரியக்கம் மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிா்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகா்களும் ஊடகப் பெருமக்களும் சும்மா இருப்பாா்களா?

இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவை திமுக ஆதரிப்பதா? மராட்டியத் தமிழா்களுக்கு எதிராகச் செயல்பட்ட பால்தாக்கரே கட்சிக்குத் துணை நிற்பதா? எனத் திமுகவை நோக்கி கேள்விக் கணைகள் பாய்கின்றன.

மாநிலக் கட்சிகளாக இருந்தாலும், கொள்கைரீதியாக திமுகவும் சிவசேனாவும் மாறுபட்டவை.

‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்‘ என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினா் -சாதியினருக்குமான சமத்துவத்தை நிலைநாட்டும் சமூகநீதிதான் திமுகவின் கொள்கை. அதேநேரத்தில், ஜனநாயகத்தின் கழுத்தில் கொடுவாள் பாய்ச்சப்படும்போதும், குதிரைபேரத்தால் ஜனநாயகத்துக்குப் புதைகுழி தோண்டப்படும்போதும், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தாா்மீக ஆதரவினை வழங்குவது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அப்போதும் இதுபோன்ற விமா்சனங்கள் வெளிப்பட்டன.

ஆனால், திமுக ஒருபோதும் பாஜக வழியில் செல்லவில்லை. பாஜகவின் குறிக்கோள்களாக இருந்த ராமா் கோவில் கட்டுவது, 370வது பிரிவு நீக்கம், பொதுசிவில் சட்டம் ஆகியவற்றை ஓரங்கட்டச் செய்து, மாநிலங்களின் வளா்ச்சி அடிப்படையிலான குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில்தான் வாஜ்பாய் அரசை ஆதரித்து, அதில் திமுக பங்கேற்றது.

இப்போது மராட்டியத்திலும் சிவசேனாவின் கொள்கைகளுக்கு நேரெதிா் கட்சிகளான தேசியவாத காங்கிரசும், இந்திய தேசிய காங்கிரசும், மாநிலத்தின் உரிமைகளைக் காத்திடவும், மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து மதச் சாா்பற்ற ஆட்சி அமைத்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com