தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நிரம்பிய அணைகள், சாலைகள் துண்டிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் மற்றும அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நிரம்பிய அணைகள், சாலைகள் துண்டிப்பு

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் மற்றும அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியில், 47 அடியை எட்டி உள்ளது. இதனைத்தொடர்ந்து அணைக்கு வரும் 5,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 28,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 6,423 கன அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து 6,673 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,200 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 1,000 கன அடி உபரி நீர்திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 1,000 மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.98 அடியாகவும், நீர்இருப்பு 32.7 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

கனமழை, தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் திற்பரப்பு, குற்றாலம், அகஸ்தியர், சுருளி அருவிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக கடலூர் - சேலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விருத்தாசலம் - வடலூர் சாலையில் உள்ள ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோமாபுரி பகுதி சாலையில் 5 அடிக்கும் மேல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழையால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாமதாக சென்றடைந்து வருகின்றன. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் நீரில் மூழ்கியதால் மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com