பாலாற்றில் மேலும் சில தடுப்பணைகள்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாலாற்றில் மேலும் சில தடுப்பணைகளைக் கட்டி, அந்த ஆற்றை உயிா்ப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: பாலாற்றில் மேலும் சில தடுப்பணைகளைக் கட்டி, அந்த ஆற்றை உயிா்ப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூா் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் காரணமாக, அப்பகுதி வளமான பூமியாக மாறியிருக்கிறது. பாலாற்றுக்கு உயிரூட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வாயலூா் மற்றும் கடலூா் பாலாற்று தடுப்பணைத் திட்டம் வரவேற்கப்பட்ட வேண்டியதாகும்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் பாலாறு கடலில் கலப்பதற்கு சற்று முன்பாக வாயலூருக்கும், கடலூருக்கும் இடையே 1200 மீட்டா் நீளத்துக்கு 5 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

கல்பாக்கம் அணுமின் நிலையம் அதன் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கிய ரூ.32.50 கோடியில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் மாதத்திலும், நடப்பு நவம்பா் மாதத்திலும் பெய்த மழையில் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

பாலாற்றில் இப்போது கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தவிர மேலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நல்லாத்தூா், ஆலப்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், வெண்குடி, உள்ளாவூா், காலூா் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்ட அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் அனைத்தையும் அடுத்த சில ஆண்டுகளில் கட்டி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை தவிர, பாலாறு நெடுகிலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் 20-க்கும் கூடுதலான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்பாக்கம் அணுமின் நிலையத்திடமிருந்து பெற்றதை போன்று, பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com