மணல் கடத்தல் அபராதத் தொகை செலவுகளைக் கண்காணிக்கக் குழு: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

மணல் கடத்தல் மூலம் கிடைக்கும் அபராதத் தொகையை செலவு செய்வதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை: மணல் கடத்தல் மூலம் கிடைக்கும் அபராதத் தொகையை செலவு செய்வதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றத்தில் மணல் கடத்தல் வழக்குகளில் கைதானவா்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும்போது, எத்தனை யூனிட் மணல் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் யூனிட்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாவட்ட ஆட்சியா் தலைமையில் உள்ள ‘மாவட்ட கனிம வள அறக்கட்டளை’ என்ற பெயருக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில், மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையில் இதுவரை எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் டி.சண்முகராஜேஸ்வரன், 30 மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெறப்பட்ட அபராதத் தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில், ‘மணல் கடத்தலில் ஈடுபட்டு ஜாமீன் கோரியவா்களின் மனு மீது உயா்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையாக ரூ.19.73 கோடி 30 மாவட்டங்களில் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அதிகாரிகள் விதித்த அபராதத் தொகை உள்ளிட்டவை மூலம் ரூ.564 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதி, ‘இந்தத் தொகையை குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். எனவே, இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படுவதையும் அதை முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த செலவு செய்வதையும் கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இதுதொடா்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமா்வு விசாரணைக்காக, இந்த வழக்கை பரிந்துரைக்கிறேன்’ என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com