மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது: மு.க.ஸ்டாலின்

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது: மு.க.ஸ்டாலின்

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடுவில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்சசியில் பங்கேற்று பேசியதாவது,  
இந்த திருமண நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எனவே இங்கு அரசியல் பேசத் தேவையில்லை. ஆனால் நான் அரசியல் பேசாவிட்டால் அரசனுக்கு கோபம் வந்துவிடும். மற்றவர்களுக்கும் அப்படித்தான். எனவே சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நேற்று கூட ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசும்போது சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு, 39 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் பொய் சொல்லி நாம் ஓட்டு வாங்கி விட்டோமாம். மக்களுக்கு மிட்டாய் கொடுத்து நாம் ஜெயித்து விட்டோமாம்.

இப்படி திரும்பத் திரும்ப எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது நான் விளக்கம் சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். சட்டப்பேரவையில் சொன்னேன். சரி நாங்கள்தான் 39 இடங்களில் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்று வைத்துக்கொள்வோம். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்பதைப்போல தேனியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களே, அங்கே மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றீர்களா, அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா என்று கேட்டேன். சரி, இன்றைக்கு இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களே, மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதி கொடுத்து, மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றீர்களா? நான் திருப்பிக் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்! மக்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா, அவ்வளவு முட்டாள்களா என்பது தான் நான் கேட்கும் கேள்வி.

இப்பொழுது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டுமென்று தெளிவாக சொல்லி இருக்கிறது. 1996ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டு மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோமா, இல்லையா? மூன்றாண்டுகளாக இந்த உள்ளாட்சித் தேர்தலை எப்படி தள்ளிப்போடுவது, யார் இதைத் தடுத்து நிறுத்துவார்கள், நீதிமன்றம் எப்படி இதை தடுத்து நிறுத்தும் என்ற சிந்தனையில்தான் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இருக்கிறது. தொடர்ந்து, ‘தி.மு.க. நீதிமன்றத்துக்குச் சென்றதால் தான் உள்ளாட்சித் தேர்தல் தடைபட்டது’ என்று தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். நேற்று கூட செய்தியாளர்களிடத்தில் பேசும் பொழுது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்.

நீதிமன்றத்திற்கு தி.மு.க. சென்றது உண்மைதான். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிதான் வழக்குப் போட்டார். என்ன காரணத்தைச் சொல்லி வழக்குப் போட்டோம்? உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்குப் போட்டோம். இந்த சிக்கல்களை தீர்த்து வைத்து விட்டு தேர்தலை நடத்துங்கள் என்று தான் கோரிக்கை வைத்தோமே தவிர, தேர்தலையே நிறுத்துங்கள் என்று எங்கேயும் கோரிக்கை வைக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. தி.மு.க. வைத்த கோரிக்கை நியாயமானது, அதை சரி செய்யும்வரை தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. அது நாம் கேட்ட கோரிக்கை அல்ல. அதற்குப் பிறகும் தமிழக அரசு அதைச் சரி செய்யவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்திற்கு போயிருக்கிறது அந்த வழக்கு. வரும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அதற்குள் எல்லாவற்றையும் தமிழக அரசு சரிசெய்ய வேண்டாமா? இடையில் திடீரென்று மாவட்டங்களைப் பிரிக்கிறார்கள்.

மாவட்டங்களைப் பிரிப்பதால் மக்கள் பயன் அடைந்தால் அதை வரவேற்கிறோம். அதில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை. அந்த மாவட்ட மக்களுக்கு வளர்ச்சி வரும் என்றால் அதை உளப்பூர்வமாக வரவேற்கிறோம். அப்படிப் பிரிக்கிற நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய இந்தச் சூழ்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு, ஊராட்சித் தலைவர்களுக்கு இடஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவு படுத்துங்கள் என்று ஒரு முறையல்ல, நான்கு முறை மாநில தேர்தல் ஆணையத்திடம் நம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக வழக்கறிஞர்கள், என்.ஆர்.இளங்கோவன், தலைமைக்கழக வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோர் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். 1989ல் எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினரான போதுதான் நானும் சட்டமன்ற உறுப்பினர் ஆனேனாம். உண்மைதான். ‘1989ல் சட்டமன்ற உறுப்பினரான நான் முதல்வராகி விட்டேன், ஆனால் ஸ்டாலின் இன்னும் முதல்வராகவில்லை’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். எனக்கு மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வராக விருப்பமில்லை. மானங்கெட்ட பிழைப்பு! நமக்கென்று சுயமரியாதை இருக்கிறது. நான் கலைஞருடைய மகன்.

1989ல் நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினராக வந்தீர்கள். நானும்1989ல்தான் சட்டப்பேரவை உறுப்பினராக வந்தேன். ஆனால்1989க்கு முன்னால் நீங்கள் எங்கே இருந்தீர்கள், நான் எங்கே இருந்தேன்? 1966ல் பள்ளிக்கூட மாணவனாக கால் சட்டை அணிந்த போதே, அரசியலுக்குள் நுழைந்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எங்கே இருந்தீர்கள் அப்போது? தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களிலும் காலடி எடுத்து வைத்தவன் தான் இந்த ஸ்டாலின். சேலத்தைவிட்டு உங்களுக்கு வேறு ஏதாவது ஊர் தெரியுமா? எடப்பாடியை விட்டு வேறு எங்காவது போயிருக்கிறீர்களா? இந்த இலட்சணத்தில் தான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஏறத்தாழ 40 ஆண்டுகள் அரசியலில் இருந்து, மிசா சட்டத்தில் கைதாகி, அதற்குப் பிறகு இளைஞரணிச் செயலாளராகி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவர் கலைஞரின் மறைவிற்கு பிறகு இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய நான் ஏதோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று தவறான பிரச்சாரத்தை இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

எப்பொழுதுமே தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ஜனவரி முதல் தேதியில் தான் ஆரம்பிக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் இப்பொழுதே அதை ஆரம்பித்து விட்டார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. மக்களுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் 10,19,493 பேர். அந்த அட்டைதாரர்கள் மாற்றப்படுகிறார்கள். மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. பொங்கல் பரிசு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதில் ஏன் இந்த பாரபட்சம்? தலைவர் கலைஞர் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்தார். ரேஷன் கார்டு இருந்தாலே அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிய ஆட்சி கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி.

இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு வேடிக்கையான துணுக்கு படித்தேன். மனதைக் கவர்ந்த திருடன் என்று ஒரு செய்தி. ஒரு திருடன் தன் தொழிலிலும் தர்மத்தை கடைப்பிடிப்பான். ஒருநாள் ஒரு வீட்டுக்குப் போய் அண்டாவில் இருந்து அடுப்பு வரை திருடி விட்டான். எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போகும் பொழுது, வீட்டுக்காரர் வந்தால் அதிர்ச்சி அடைவார் என்று யோசித்தான். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு கவரில் வைத்து, ‘நான் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போகிறேன்.

இரண்டுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதி வைத்துவிட்டுப் போனான். வீட்டுக்காரர் வந்தார். எல்லா பொருட்களும் களவு போய்விட்டன. அழுதார். புலம்பினார். அப்போது அந்த கவரை பார்த்தார். கொஞ்சம் சந்தோசம். எல்லா வீட்டிலும் திருடி விட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான் அந்தத் திருடன். அந்த ஆயிரம் ரூபாய் எதற்கு என்று கேட்காதீர்கள். பொங்கலுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயை எதற்கென்று கேட்காதீர்கள். இதுதான் இன்றைய நிலைமை.

500க்கும் மேற்பட்டவர்கள் மிசாவில் கைதானவர்கள் இருக்கிறார்கள். நான் கூட மிசாவில் கைதானது இப்போது சர்ச்சையானது. நான் அப்போதே சொன்னேன், நான் சிறையிலே இருந்தேன் என்பதை நானே சொல்வது வெட்கமாக இருக்கிறது என்று. மிசா சட்டத்திலே ஓராண்டுகாலம் கைதாகி, தலைவர் கலைஞர்தான்; இயக்கம்தான் லட்சியம் என்று உணர்வுபூர்வமாக இருந்த ஆற்றலாளர் அண்ணன் பெரியண்ணன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com