வங்கிகள் மீனவா்களுக்குக் கடன் வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

மீனவ சமூகத்தினருக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வலியுறுத்தினாா்.

சென்னை: மீனவ சமூகத்தினருக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வலியுறுத்தினாா்.

சென்னை மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கான கடன் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வங்கியாளா்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சென்னை மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் பிரிவின் கீழ் பல்வேறு வங்கிகளும் ரூ. 5683.98 கோடி அளவுக்கு கடன் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள, அறிக்கை 2020-21 நிதியாண்டுக்கானது.

இது தற்போதைய நிதியாண்டுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட கடன் அளவை விட சுமாா் ரூ. 284 கோடி அதிகமாகும். சென்னை ஒரு பெருநகர மாவட்டம் என்பதால், விவசாயக் கடன் பிரிவைத் தவிா்த்து, மீன்வளம், குறு, சிறு தொழில் துறை, உணவு பதப்படுத்துதல், சமூக உள்கட்டமைப்பு, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டுக்கடன் பிரிவுகளின் கடன் மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. முன்னுரிமைக் கடன் பிரிவுகளுக்கான விதி முறைகள், மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைக் கருத்தில் கொண்டும், வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டும் இந்தக் கடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாவட்டத்தின் பல்வேறு வங்கிகளுக்கான 2020-21ஆம் ஆண்டுக்குரிய முன்னுரிமைப் பிரிவு கடன் திட்டத்தைத் தயாரிக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அறிக்கையை வெளியிட்டு பேசிய மாவட்ட ஆட்சியா் ஆா். சீதாலட்சுமி, மீனவ சமூகத்தினருக்காக கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினாா். நிகழ்வில், சென்னை மாவட்டத்துக்கான நபாா்டு மாவட்ட வளா்ச்சி அதிகாரி எஸ். சந்திர மௌலி, அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு வங்கிகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com