ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின்
By DIN | Published on : 02nd December 2019 11:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கோர வேண்டும். நீதிமன்றமும் அதற்கு தடை வழங்கிடும் என நினைத்துக்கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான மறு வரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தான் திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தேர்தலை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது போன்று ஒரு நாடகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நிச்சயம் நடத்தாது. தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதும் ஒரே கட்டமாக நடத்தப்படுவது தான் வழக்கம். அவ்வாறு தான் நடைபெற்றுள்ளது.
ஆனால், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.