ஸ்டாலினை வாழ்த்திப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் மீது பாயப் போகுது கட்சித் தலைமையின் நடவடிக்கை!

திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக பாஜ தெரிவித்துள்ளது.
பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக பாஜ தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.        

இந்த நிகழ்வில் பேசிய அரசகுமார் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர் கூறியதாவது:

நான் அன்று பார்த்ததில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரி உடற்கட்டுடன் இருக்கும் தலைவர் ஸ்டாலின்தான். உண்மையைச் சொல்வதென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து தான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்.

இப்போது யார் யாரையோ அடுத்த முதல்வர் என்கிறார்கள். அதே வார்த்தையை நாம் ஸ்டாலினுக்கும் பயன்படுத்த வேண்டாம். பல்லாண்டு காலம் அந்தப் பதவிக்கு அருகில் இருந்தும் அதை முறைகேடாக அடைய நினைக்காதவர் அவர்.

தான் ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே அவர் விரும்புவார். அதற்காக அவர் காத்திருக்கிறார். விரைவில் அதற்கான காலம் கனியும்.  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்.

இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிலையில் பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக பாஜ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  - பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயல் ஆகும்.

ஸ்டாலின் முதல்வராவார் எனக்கூறிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது; கட்சி கூட்டங்கள், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com