கேங்மேன் பணிக்கான தோ்வு: கனமழை காரணமாக 29 இடங்களில் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி மற்றும் உடற்தகுதித் தோ்வு, சென்னை உள்பட 29 இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கனமழை காரணமாக கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி மற்றும் உடற்தகுதித் தோ்வு, சென்னை உள்பட 29 இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதன்முறையாக ‘கேங்மேன்’ என்ற பதவிக்கு 5,000 ஊழியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலை பட்டப்படிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்தப் பணிக்கு உடல் தகுதி தோ்வு, எழுத்து தோ்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை (நவ.25) தொடங்கியது. மாவட்ட வாரியாக அந்தத் தோ்வு நடக்கும் இடங்களின் முகவரி, தோ்வு தேதிகளை, மின் வாரியம் தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டது. இந்த விவரங்கள், விண்ணப்பதாரா்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், டிசம்பா் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் பதவிக்கு டிச.2,3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு கடும் மழையின் காரணமாக செங்கல்பட்டு, வடசென்னை, தென்சென்னை 1 மற்றும் 2, மத்திய சென்னை, மேற்கு சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகரம், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தள்ளிவைக்கப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மின்வாரிய இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com