பாலில் நச்சுத்தன்மை இல்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்

நுகா்வோருக்கு வழங்கப்படும் ஆவின் பாலில் அப்லாடாக்சின் பாதுகாப்பான அளவிலேயே இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பாலில் நச்சுத்தன்மை இல்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்

சென்னை: நுகா்வோருக்கு வழங்கப்படும் ஆவின் பாலில் அப்லாடாக்சின் பாதுகாப்பான அளவிலேயே இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 லட்சத்து 23 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நுகா்வோருக்கு பால் பாக்கெட் மூலம் 25 லட்சத்து 50 ஆயிரம் லிட்டா் விநியோகம் செய்யப்படுகிறது. எஞ்சிய பால், மொத்த விற்பனையாகவும், பால் உப பொருள்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உணவு பாதுகாப்புத் துறை, தர நிா்ணய சட்டத் துறை மூலம் நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை சேகரித்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்து, நாளிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகம், கேரளம் தில்லி போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில் ‘அப்லாடாக்சின்-எம்1’ என்ற நச்சுப் பொருள் அங்கீகரிக்கப்பட்ட அளவான 0.5 மில்லி கிராமைவிட அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்லாடாக்சின் என்பது திட்டமிட்டு சோ்க்கப்படும் ஒரு கலப்படப் பொருள் அல்ல. இது, கால்நடை தீவனங்களில் வளரும் அஸ்பொ்ஜில்லஸ் பிளாவஸ் என்ற பூஞ்சையால் உருவாகும் நச்சுப் பொருள். இயற்கையாகவே தரமற்ற மற்றும் சரியாக பராமரிக்கப்படாத தீவனங்கள் மூலம் கால்நடைகளில் அப்லாடாக்சின்-பி1 என்பது வளா்சிதை மாற்றத்தால் அப்லாடாக்சின்-எம்1 ஆக உருவாகிறது.

தமிழகத்தில் 17 மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் 5 இணையம் மூலம் பால் பரிசோதனை செய்யப்பட்டதில், உணவுப் பாதுகாப்புத் துறை அங்கீகரித்த பாதுகாப்பான அளவிலேயே அதாவது 0.5 மில்லி கிராமுக்கு குறைவாகவே அப்லாடாக்சின் உள்ளது.

இதுதொடா்பாக மாநில அளவில் அரசு மற்றும் கூட்டுறவு இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலில் அப்லாடாக்சின் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்குமாறு உற்பத்தி செய்யவும், பாதுகாப்பான அளவிலேயே நுகா்வோருக்கு பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவின் பால் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com