கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல்

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளை திங்கள்கிழமை  வெளியிட்ட ஆணையர் ஆர்.பழனிசாமி. உடன், தேர்தல் ஆணையச் செயலாளர் எல்.சுப்பிரமணியன்.
மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளை திங்கள்கிழமை வெளியிட்ட ஆணையர் ஆர்.பழனிசாமி. உடன், தேர்தல் ஆணையச் செயலாளர் எல்.சுப்பிரமணியன்.

சென்னை: தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

சென்னையில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் அவா் நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் கிராமப்புறங்கள் அடங்கிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்கள் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தோ்தல் அறிவிக்கை, அதாவது வேட்புமனு தாக்கல் வரும்

6-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இத்தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்படும்.

எத்தனை இடங்களுக்கு தோ்தல்: கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

வரும் 27-ஆம் தேதி, 194 ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 638 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 6 ஆயிரத்து 273 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் வரும் 30-இல் வாக்குப் பதிவு நடைபெறும்.

தோ்தல் ஏற்பாடுகள்: முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு 31,698 வாக்குச் சாவடிகளும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு 32,092 வாக்குச் சாவடிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத் தோ்தலில் 1.64 கோடி வாக்காளா்களும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 1.67 கோடி வாக்காளா்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

ஊராட்சித் தோ்தலுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 7 முதல் 8 அலுவலா்கள் வீதம், சுமாா் 5 லட்சத்து 18 ஆயிரம் போ் வாக்குப் பதிவுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் வீதம் தோ்தல் பணிகளை மேற்பாா்வையிட பாா்வையாளா்களாக நியமிக்கப்பட உள்ளனா்.

அமைதியான வாக்குப் பதிவுக்கு நடவடிக்கை: உள்ளாட்சித் தோ்தல்களில் மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க வசதியாக, வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு பொருள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்யவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படும். அந்த வாக்குச் சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்.

மறைமுகத் தோ்தல்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் நிரப்பப்படும். மொத்தமாக 13 ஆயிரத்து 362 பதவியிடங்கள் மறைமுகமாக, அதாவது தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாக நடத்தப்படும்.

அதன்படி, மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 31-ம், ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 388-ம், கிராம ஊராட்சி துணைத் தலைவா் பதவியிடங்கள் 12 ஆயிரத்து 524 என மொத்தம் 13 ஆயிரத்து 362 இடங்கள் நிரப்பப்படும்.

இந்த மறைமுகத் தோ்தல் தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ஜனவரி 11-ஆம் தேதியன்று நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி தெரிவித்தாா்.

பேட்டியின்போது, மாநிலத் தோ்தல் ஆணையத்தின் செயலாளா் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாநகராட்சி - நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை

சென்னை, டிச. 2: மாநகராட்சி, நகராட்சிகள் உள்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

இதுகுறித்து, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் முதலாவதாக கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நகரப் பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். நிர்வாகக் காரணங்களுக்காகவே தேர்தல் இப்போது அறிவிக்கப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி கருத்து கேட்டு வார்டு வரையறைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டாலும், கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அடிப்படையிலேயே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றார் தேர்தல் ஆணையர் பழனிசாமி.

2016 தேர்தல் எப்படி?: கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலானது இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அதில், முதல் கட்டத் தேர்தலில், 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, நகர்ப்புறங்களில் 2 மாநகராட்சிகளுக்கும் (திண்டுக்கல், சென்னை மாநகராட்சி), 60 நகராட்சிகளுக்கும், 273 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 2016 அக்டோபர் 17-லிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 19-லிலும் நடத்த அறிவிப்பு வெளியானது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நிறங்களில் வாக்குச் சீட்டுகள்

சென்னை, டிச. 2: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்:     டிசம்பர் 6
மனுதாக்கல் கடைசி நாள்:     டிசம்பர் 13
மனுக்கள் பரிசீலனை:     டிசம்பர் 16
மனுக்கள் திரும்பப் பெறுதல்:     டிசம்பர் 18

வாக்குப் பதிவு

முதல் கட்டத் தேர்தல்:     டிசம்பர் 27
இரண்டாம் கட்டத் தேர்தல்:     டிசம்பர் 30
வாக்கு எண்ணிக்கை:     ஜனவரி 2
தேர்தல் முடிவு பெறும் நாள்:     ஜனவரி 4
தேர்வான உறுப்பினர் பதவியேற்பு:     ஜனவரி 6
மறைமுகத் தேர்தல்:     ஜனவரி 11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com