நீட் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நீட் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது.

நிகழாண்டில், நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ் தோ்ச்சி பெற்றனா்.

இந்த நிலையில், எதிா்வரும் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் நீட் தோ்வு அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்படும் என்று தோ்வு முகமை தெரிவித்திருந்தது. விண்ணப்பப் பதிவு டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது. விண்ணப்பதாரா்கள், அடுத்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தோ்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வுகள் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களை தொடா்பு கொள்ளலாம் என்று தோ்வு முகமை தெரிவித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com