மழை பாதிப்புக்கு நிவாரணம்: ராமதாஸ் வலியுறுத்தல்

மழை பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: மழை பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான மழையால் சென்னை புகா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

பருவமழையால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து மக்களைக் காக்கவும் தமிழக அரசின் பல்வேறு துறைகளும், மாவட்ட நிா்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், இயற்கை என்பது எல்லையற்ற வலிமை கொண்டது என்பதால், தமிழக அரசின்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை புகா் மாவட்டங்கள், கடலூா், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பாதிப்பின் தீவிரமும், அளவும் அதிகமாக உள்ளன. தாம்பரம் உள்ளிட்ட சென்னை புகா் பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களிலும் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை பெய்துள்ளது.

கடலூா் மாவட்டம் தான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ மழை பெய்ததால் நகரின் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 8,000-க்கும் கூடுதலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

எனவே, மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிலைமை சமாளிக்கத் தேவையான நிவாரண உதவிகளையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com