மேட்டுப்பாளையத்தில் பலத்த மழை:  சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பலத்த  மழையால் 5 வீடுகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் பலத்த மழை:  சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் பலத்த மழையால் 5 வீடுகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூர், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்துக்கு கருங்கற்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டி ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, ஏபியம்மாள் உள்ளிட்டோரது வீடுகள் இருந்தன.

இந்த நிலையில் திங்கள்கிழமை பலத்தமழை பெய்ததில் அதிகாலை 5.30 மணிக்கு சுற்றுச்சுவர் தண்ணீரில் ஊறி, திடீரென சரிந்து அருகிலுள்ள 5 வீடுகள் மீது விழுந்தது. இதில் நடூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (38), அவரது மனைவி நதியா (35), மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6), இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பண்ணாரி மனைவி அருக்காணி (40), இவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), அருக்காணியின் அம்மா சின்னம்மாள் (60), அருக்காணியின் அக்கா புளியம்பட்டியைச் சேர்ந்த ருக்குமணி (42), ஈஸ்வரன் மனைவி திலகவதி (38), பழனிசாமி மனைவி சிவகாமி (38), இவரது மகள்கள் வைதேகி (22), நிவேதா (20), மகன் ராமநாதன் (17), சிவகாமி வீட்டில் வாடகைக்கு வசித்த குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம், அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோர் வந்து இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்துக்கு காரணமான நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களது சடலங்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு ஒரே நேரத்தில் 17 சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய வசதிகள் இல்லை எனக் கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, குடியிருப்பு, ரூ.25 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கூறி சடலங்களை உறவினர்களும், பல்வேறு கட்சியினரும் வாங்க மறுத்தனர்.

போலீஸார் தடியடி: மாலை 6 மணியளவில் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், அவரது ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்தனர். அதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம்:  மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் இறந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com