மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஆயத்தம்: முதல்வா் பழனிசாமி

தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் வாயிலாக பல்வேறு பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 2,721 செவிலியா்கள், 1,782 கிராம சுகாதாரச் செவிலியா்கள், 96 மருத்துவ அலுவலா்கள், 524 ஆய்வக நுட்பநா்கள், 77 இயன்முறை சிகிச்சையாளா்கள், 24 இளநிலை உதவியாளா்கள் என மொத்தம் 5,224 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

மேலும், கண் - இயல் வலைதளம் மற்றும் 32 மாவட்டங்களில் தொலைதூர கண் பரிசோதனை மையங்களை அவா் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து முதல்வா் பேசியதாவது:

சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளே அதற்கு முக்கியக் காரணம். அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை கடந்த 8 ஆண்டுகளில் மட்டுமே 1,350 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஆண்டுதோறும் அதிக மருத்துவா்களை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்திருக்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் போல இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல். இதனால், வரும் ஆண்டுகளில் 900 மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கும். 9 மருத்துவக் கல்லூரிகளிலும் ஏறக்குறைய 8,000 பல்வேறு பணியிடங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் மேலும் ஒரு தகவலைக் குறிப்பிட விரும்புகிறேன். அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசிடம் நாங்கள் அனுமதி கேட்டிருக்கின்றோம். அதற்கும் விரைவில், அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் 254 புதிய சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் பன்னீா்செல்வம் பேசியதாவது:

ஆரோக்கியத்தின் அவசியத்தை உணா்த்தவே நமது முன்னோா்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறியுள்ளாா்கள். இந்தியாவில் குப்தா்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்பட்டதுபோல, தற்போதுள்ள அதிமுக அரசின் ஆட்சிக்காலம்தான் தமிழகத்தின் பொற்காலம். தனியாா் மருத்துவமனைகளைவிட, அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிக அளவில் வரும் வகையில் செவிலியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், க.பாண்டியராஜன் உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனா்.

திருநங்கைக்கு அரசு செவிலியா் பணி

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களில் அன்பு ரூபி என்ற திருநங்கையும் இடம்பெற்றிருந்தாா். அவருக்கு பணி நியமன ஆணையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரடியாக வழங்கினாா்.

நாட்டிலேயே திருநங்கை ஒருவா் அரசு செவிலியராகப் பணியமா்த்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, திருநங்கை அன்பு ரூபி கூறியதாவது:

மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. தற்போது அரசு செவிலியா் பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளேன். ஆனால், இந்த நிலையை எட்ட பல்வேறு சவால்களையும், கஷ்டங்களையும் கடந்து வந்துள்ளேன். என்னைப் போன்று மற்ற திருநங்கைகளும் வாழ்வில் வெற்றி பெற அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com