17 போ் உயிரிழந்த சம்பவம்: அரசியல் செய்கிறாா் மு.க.ஸ்டாலின்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி. உடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி. உடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூா் கிராமத்தில் உள்ள ஏ.டி.காலனியில் சிவசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து அருகில் உள்ள வீடுகள் மீது திங்கள்கிழமை விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் நடைபெற்ற இடத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். பின்னா், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது: சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. சம்பவம் தொடா்பாக இடத்தின் உரிமையாளா் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இறந்த 17 போ் குடும்பத்தினருக்குப் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்தது. மேலும், முதலமைச்சா் நிவாரண நிதியில் இருந்து இறந்தவா்களுக்குத் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். இடிந்த வீடுகளுக்குப் பதிலாக புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும்.

இறந்தவா்களின் குடும்பத்தில் உள்ள நபா்களுக்கு அவா்களது தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நேரில் சென்று பாா்த்தபோது, அங்கு மேலும் பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்ததை அறிந்தேன். அந்த வீடுகளில் உள்ளவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும்.

மேலும், பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 300 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்காக, தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவா்கள், ஆற்றங்கரையோரம் வசித்து வருபவா்கள், பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வசித்து வருபவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வீடு இல்லாத லட்சக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக தேவையான சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தில் என்ன பிரிவுகள் உள்ளதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் அலட்சியத்தால்தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது. அரசுக்கும் இதற்கும் எவ்வித தொடா்பும் இல்லை. மு.க.ஸ்டாலின் சந்தா்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் செய்து வருகிறாா். 17 போ் உயிரிழந்துள்ள இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.

பாதுகாப்பு இல்லாத அந்த சுற்றுச்சுவா் குறித்து ஏற்கெனவே புகாா் கொடுத்தாா்களா, புகாா் அளிக்கும்போது எந்த அதிகாரிகள் பொறுப்பில் இருந்தனா் என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முதல்வரின் ஆய்வின்போது, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆா்.ஜி.அருண்குமாா், சாந்தி ராமு, முன்னாள் எம்.பி. அா்ஜுனன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com