மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் பள்ளிக்கட்டடம்: அச்சத்தில் மாணவர்கள்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மாணவர்கள் அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கின்றனர். 
மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் பள்ளிக்கட்டடம்: அச்சத்தில் மாணவர்கள்

திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மாணவர்கள் அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கின்றனர். 

கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிள்ளுக்குடி ஊராட்சியில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் காரியமங்கலம், சிங்கமங்கலம், படுகை, கடலாக்குடி, மணலூர், வலத்தாமங்கலம், திருபஞ்சரம் தியாகராஜபுரம், அய்யடிமங்கலம், மோகனூர், கூரத்தாக்குடி, கிள்ளுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட சுமார் 200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 1985}ஆம் ஆண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. 

 இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில், பள்ளியின் மேற்கூரை இடிந்து இரண்டுக்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்கக் கூட இயலாத அளவுக்கு சேதமடைந்தது. தற்போது பல கட்டடங்களில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, மாணவர்களின் தலையில் விழும் அபாயம் நிலவுகிறது. இப்பள்ளியில் இடிந்துவிழும் தருவாயில் உள்ள கட்டடங்களால், பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கே தயங்குவதாகவும், இதன் விளைவாக மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  அதேவேளையில், இப்பள்ளி மாணவர்கள் போதிய வகுப்பறை வசதி இல்லாத பட்சத்திலும், கடந்த இரு ஆண்டுகளாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், அதிக மதிப்பெண் பெற்றும் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அதேபோல் நிகழாண்டு 5 பேர் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை பெற 
தகுதி பெற்றுள்ளனர்.


 பல்வேறு வகையில் மாணவர்கள் சாதனை பெற்று வந்தாலும், இப்பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு, ஒவ்வொரு நாளையும் அச்ச உணர்வோடு எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிகழாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஆய்வுக்கூடம் தற்போது பயன்பாட்டில் இல்லாததால், அவர்கள் எவ்வாறு பொதுத் தேர்வை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் கூறியதாவது:
 எனது மகன் இப்பள்ளியில் 6}ஆம் வகுப்பு படிக்கிறான். கஜா புயலின்போது சேதமடைந்த வகுப்பறைகள் இன்னமும் புதுப்பிக்கப்படாததால், எனது மகன் உள்பட பெரும்பாலான மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்துதான் கல்வி பயில்கின்றனர். 

தற்போது மழைக்காலம் என்பதால் வராண்டாவில் அமர்ந்திருக்கும் எனது மகன் மழைச்சாரலில் நனைந்து பலமுறை உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படுகிறான். இப்பள்ளியில் ஆங்காங்கே  உடைந்திருக்கும் கான்கிரீட் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து, பெரும் சேதத்தை விளைவிக்கலாம். ஆகையால், இப்பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்ட கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com