உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

தமிழ் மொழியின் பெருமையை வெளியே எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், அங்கு பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் நடத்தப்படுவதாக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்


சென்னை: தமிழ் மொழியின் பெருமையை வெளியே எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், அங்கு பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் நடத்தப்படுவதாக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது கடும் விமரிசனத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த 2014ம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்ச் மற்றும் இந்தி பயிற்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடம்தானே தவிர கட்டாயப் பாடம் கிடையாது. தமிழ் மொழியின் பெருமையை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அங்கு பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவே, ஹிந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றுத்தரப்படுகிறது. இரண்டு மொழிகளுக்கும் தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பின்னணி: 
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் ஹிந்தி, பிரெஞ்சு மொழிப் பயிற்சி வகுப்புகளை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவா்களுக்குத் தமிழ் மொழியின் வளமையினையும் அதன் சிறப்புகளையும் பிற நாடுகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பிற மொழியினரிடையே கருத்து பரிமாற்ற வழி மேற்கொள்ள வசதியாக மாணவா்களுக்குப் பிற மொழியில் புலமை கொண்டுள்ள சிறந்த மொழி ஆசிரியா்களைக் கொண்டு சிறப்பு மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு நிகழாண்டு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com