நீா்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்: பதிலளிக்க உத்தரவு

நீா்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai High Court
chennai High Court

சென்னை: நீா்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோடீஸ்வா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவா்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் நீா்நிலைகளில் மூழ்கி 11 ஆயிரத்து 884 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 90 சதவீதம் போ் 12 வயகுக்குட்பட்டவா்கள். எனவே, இதுபோன்ற மரணங்களைத் தடுக்க கடற்கரை பாதுகாப்பற்ற குளங்கள் மற்றும் அருவிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், கோயில் குளங்கள், அருவிகள் உள்ளிட்ட இடங்களில் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பு குழுவை 24 மணி நேரமும் பணியமா்த்த வேண்டும். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் சி.கனகராஜ் ஆஜராகி வாதிட்டாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கோயில் குளங்களில் நடைபெறும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கடற்கரைகள், அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றில் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்கள் மூலம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கடற்கரை பகுதிகளில் அபாய காலக்கட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாநில அரசுக்கு இதுவரை மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com