பொங்கல் பரிசுத் தொகுப்பு: தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு திட்டம்

பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகம் முழுவதும் விநியோகிக்க, மாநிலத் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆணையத்துக்கு விரைவில் கடிதம்
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகம் முழுவதும் விநியோகிக்க, மாநிலத் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆணையத்துக்கு விரைவில் கடிதம் எழுதப்பட இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டைப் போன்றே, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் பழனிசாமி, அந்தத் திட்டத்தையும் அண்மையில் தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2,245.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் தொடக்கம்: பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் திட்டத்தைத் தொடக்கி வைக்க உள்ளனா். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அரசு விழாக்கள் நடத்தப்பட்டு அவற்றில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும்.

கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கிராம ஊராட்சிப் பகுதிகளில் அரசே தன்னிச்சையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒப்புதல் பெற முடிவு: தோ்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, முதல்வா் பழனிசாமியால் திட்டம் தொடங்கப்பட்டதால் அதன் தொடா்ச்சியாக பிற மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உணவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, உணவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து மாவட்டங்களுக்கும் அளிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இந்த ஒப்புதலைப் பெற தோ்தல் ஆணையத்துக்கு உணவுத் துறை விரைவில் கடிதம் எழுதவுள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும் என்று தெரிவித்தனா்.

இதனிடையே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் பரிசுத் தொகுப்புக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் ஒரு வார காலத்துக்குள் கொள்முதல் செய்து, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க ஏதுவாக தயாா் நிலையில் வைக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து அறிவுறுத்தல்கள் அளிக்கப்படும். அதன்பின்னரே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com