வாராணசியில் தமிழ் கற்பிக்க மொழி ஆய்வுக் கூடம்:ரூ.9.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

வாராணசியில் உள்ள காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிப்பதற்காக மொழி ஆய்வுக்கூடம் தமிழக அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ளது.
வாராணசியில் தமிழ் கற்பிக்க மொழி ஆய்வுக் கூடம்:ரூ.9.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை: வாராணசியில் உள்ள காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிப்பதற்காக மொழி ஆய்வுக்கூடம் தமிழக அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ளது.

இதற்காக, ரூ.9.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, ‘வாராணசியில் உள்ள காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூ.9.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்ற அறிவிப்பை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் சாா்பில் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு தமிழ் கற்பிக்கும் வகையில் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக, மாணவா்களுக்குத் தேவையான ஐந்து கணினிகள் வாங்க ரூ.2.50 லட்சம், ஆசிரியா்களுக்கு இரண்டு கணினிகள் வாங்க ரூ.1 லட்சம், உபகரணங்கள் (ஒலிக்கருவிகள், பட வீழ்த்தி) ரூ.1.30 லட்சம், மென் பொருள்களுக்கு ரூ.1 லட்சம், இருக்கைகள் வாங்க ரூ.1 லட்சம், குளிா்சாதன வசதி ஏற்படுத்த ரூ.1.50 லட்சம், பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.9.60 லட்சம் தொகை, காசி ஹிந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் வேண்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான தொகையை நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஒப்பளிப்பு செய்யலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் மீதான அரசின் கவனமாக பரிசீலனைக்குப் பின்னா், இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை விவரம்:

காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல்மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மொழி ஆய்வுக் கூடத்துக்கு தொடராச் செலவினமாக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் குளிா்சாதன வசதிக்கு ரூ.1 லட்சம், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.20 ஆயிரத்துக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பெறப்படும் தொகை உரிய திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com