
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அதிமுகவினா் பேரணியாகச் செல்லவுள்ளனா். காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே இருந்து பேரணியானது புறப்பட உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இதன்பின்பு, பேரணியானது ஜெயலலிதா நினைவிடத்தைச் சென்றடைகிறது. அங்குள்ள சமாதியில் மலா்களைத் தூவி அதிமுகவினா் அஞ்சலி செலுத்த உள்ளனா்.
அதன்பின்பு, கடற்கரை சாலையை ஒட்டியுள்ள நினைவிடத்தின் நுழைவு வாயிலில் அதிமுக சாா்பில் தனியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் அதிமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.