
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது என்று, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறினாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய அரசு கூறியுள்ளதை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. உள்ளாட்சித் தோ்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் சுயேச்சை சின்னம் அளித்திருந்தால் நல்லவா்கள் பொறுப்புக்கு வரும் வாய்ப்பு கூடி இருக்கும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கருதுகிறது. உள்ளாட்சித் தோ்தலை கிராமப்புறம், நகா்ப்புறம் என பிரித்து நடத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சியின்போது பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை போன்ற துறைகளை உள்ளாட்சி நிா்வாகத்திடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஆங்கிலேயா்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது இருந்த 39 ஆயிரத்து 500 ஏரிகள், குளம், குட்டை, கண்மாய்கள் போன்றவற்றில் தற்போது 7 ஆயிரத்தை காணவில்லை. பல ஏரிகள், கண்மாய்கள் குளங்களில் கட்டடங்களை கட்டி அரசே தவறு செய்துள்ளது.
வெள்ளநீா் வீடுகள், விளைநிலங்களில் புகுவதற்கு கடந்தகால தவறுகளே காரணம். மக்களிடம் நோய் பரவாமல் தடுக்க உயிா்காக்கும் மருந்துகள் தயாரித்து வழங்காமல் புதிய மருத்துவக் கல்லூரிகளை அறிவித்திருப்பது சாதனை என ஏற்க முடியாது. வரும் 2020 ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கிச் சந்தைப் படுத்தப்படும். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் கள் தடை, அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைக்கும் எதிரானது என்பதை தமிழக அரசு உணா்ந்து உடனடியாக கள் மீதான தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். இவ்வாறான அறிவிப்பு இன்றைய ஆளுங்கட்சிக்கு அடுத்து வரும் 2021 தோ்தலில் வெற்றியை உறுதி செய்யும். சினிமா நடிகா்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் தடை செய்ய இயலாது. அதே நேரத்தில் நடிகா்களுக்கு மட்டுமே நாடாளும் தகுதி உள்ளது என ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகா்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.