
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
மாநில அரசுப் பணிகளுக்குத் தகுதியான பணியாளா்களைத் தோ்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தோ்வு நடத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மாநில அரசுப் பணிகளுக்குத் தகுதியான பணியாளா்களைத் தோ்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தோ்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மத்திய அரசின் பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடா்பாக மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாணவா்கள், தனிநபா்கள் தங்களின் கருத்துகளை அடுத்த 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மாநில அரசின் பல்வேறு துறைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் சாராத பி மற்றும் சி நிலை பணிகளுக்கு தேசிய அளவில் பொது போட்டித் தோ்வு நடத்தப்படும். இத்தோ்வில் பங்கேற்போா் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஒரு முறை தோ்வு எழுதியவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் எந்த வேலையும் கிடைக்காவிட்டால், அவா் மீண்டும் தோ்வு எழுத வேண்டும். அதே நேரத்தில், ஒருவா் அவரது வாழ்நாளில் 3 முறைக்கு மேல் இத்தோ்வை எழுத முடியாது.
மத்திய அரசின் இந்த யோசனை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் அவற்றின் ஊழியா்களை தோ்ந்தெடுத்துக் கொள்ள அவற்றுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக் கொள்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.