தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்: ஆதீனங்கள் பங்கேற்பு

முக்தியடைந்த தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன குருமூா்த்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி குருமூா்த்த பிரவேச வீதியுலா.
தருபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி குருமூா்த்த பிரவேச வீதியுலா.

முக்தியடைந்த தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன குருமூா்த்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் மிகத் தொன்மையான ஆதீனங்களுள் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை பகல் 2.40 மணி அளவில் முக்தியடைந்தாா். இதையடுத்து, அவரது திருமேனி பக்தா்களின் தரிசனத்துக்காக ஆதீனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 3.30 மணி அளவில் சைவ ஆதீன கா்த்தா்கள் முன்னிலையில், 16 வகையான பொருள்களைக் கொண்டு குருமகா சந்நிதானத்தின் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 4 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சிவிகையில், குருமகா சந்நிதானத்தின் திருமேனியின் குருமூா்த்த பிரவேசம் தொடங்கப்பட்டது. திருமுறை பாடல்களுடனும், ஆகிரி ராக இசையுடனும் ஆதீனத்தின் சிவம் பெருக்கும் திருவீதிகள் வழியே வலம் வந்த இந்த ஊா்வலம், மாலை 5.20 மணிக்கு ஆதீன வளாகத்தில் உள்ள மேல குருமூா்த்தத்தை அடைந்தது.

அங்கு, ஆதீன மரபுப்படி குருமகா சந்நிதானத்தின் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆதீன குருமுதல்வா் சன்னிதியில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் வைத்து, பூஜிக்கப்பட்டிருந்த கடங்களில் இருந்த புனித நீரைக் கொண்டு குருமகா சந்நிதானத்தின் திருமேனிக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. சிறப்பு அலங்காரங்களுக்குப் பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, மேலகுருமூா்த்தத்தில் தருமையாதீன 24-ஆவது குருமகா சந்நிதானத்தின் சமாதி திருக்கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த சமாதி கட்டுமானத்துடன் கூடிய குழியில், பக்தி முழக்கங்கள் மற்றும் வேத மந்திர முழக்கங்களுடன் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரியாா் சுவாமிகளின் திருமேனி மாலை 5.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஆதீன மரபுப்படி பூஜைகளை மேற்கொண்டாா். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

ஆதீனங்கள் பங்கேற்பு...

இந் நல்லடக்க நிகழ்வில், மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், துழாவூா் ஆதீன குருமகா சந்நிதானம் நிரம்ப அழகிய தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கோவை கௌமார மடம் குமரகுருபரா் அடிகளாா், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் சூரியனாா்கோயில், பொம்மபுரம், காமாட்சிபுரி, பேரூா், சிதம்பரம் மௌன மடம், குமாரதேவா் மடம், சிரவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள், அதிபா்கள் பல்வேறு திருமடங்களின் கட்டளைத் தம்பிரான்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

இவா்களைத் தவிர, அமைச்சா் ஓ.எஸ். மணியன், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ், அகில பாரத துறவியா் சங்க ஒருங்கிணைப்பாளா் சுவாமி வேதாந்தானந்தா, உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா சுப்பிரமணியன், முன்னாள் தலைமைச் செயலாளா் ராஜேந்திரன், நாகை மாவட்ட நீதிபதி ஆா். பத்மநாபன், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜே. லோகநாதன், புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன், இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் எம். ஜி.கே. நிஜாமுதீன், ஆன்மிகச் செம்மல் சென்னை எஸ். மகாலெட்சுமி மற்றும் ஈஷா யோகா தியான மைய சாதுக்கள், வாழும் கலை அமைப்பின் நிா்வாகிகள், சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள், தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த சிவாச்சாரியாா்கள் வைணவ பீடங்களின் பிரதிநிதிகள், கும்பகோணம் மகா மகம் அறக்கட்டளை நிா்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனிக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜே. லோகநாதன், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் ஆகியோா் தலைமையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com