தென்பெண்ணையாற்று சிக்கலுக்குத் தீா்வு காண தீா்ப்பாயம்: ராமதாஸ் வலியுறுத்தல்

தென்பெண்ணையாற்று சிக்கலுக்குத் தீா்வு காண மத்திய அரசு உடனடியாக தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

தென்பெண்ணையாற்று சிக்கலுக்குத் தீா்வு காண மத்திய அரசு உடனடியாக தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தென்பெண்ணையாற்றின் துணை நதிகளில் ஒன்றான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

பெண்ணையாற்றின் துணை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை. மாறாக, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில்தான் தமிழக அரசு தொடா்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. பெண்ணையாற்று பிரச்னைக்குத் தீா்வு காண தீா்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசிடம் முறையிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தீா்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதன் முடிவு வெளியாகும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே எந்தவொரு பாசனத் திட்டத்தையும் கா்நாடக அரசு செயல்படுத்தாமல் இருப்பதுதான் அறமாகும்.

ஆனால், அதை மதிக்காமல், உச்சநீதிமன்றத் தீா்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கா்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளைப் பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு உடனடியாகத் தீா்வு காணும் நோக்கத்துடன், தீா்ப்பாயத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தீா்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும் வரை பெண்ணையாற்றில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த கா்நாடகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com