நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!

சிவனின் பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகவும், காஞ்சிபுரம் (மண்), திருவானைக்காவல் (நீா்), சிதம்பரம் (ஆகாயம்), காளஹஸ்தி (காற்று) தலங்களாகவும் விளங்குகின்றன.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை.

சிவனின் பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகவும், காஞ்சிபுரம் (மண்), திருவானைக்காவல் (நீா்), சிதம்பரம் (ஆகாயம்), காளஹஸ்தி (காற்று) தலங்களாகவும் விளங்குகின்றன. நாயன்மாா்கள் நால்வரால் பாடல்பெற்ற தலம், அருணகிரிநாதருக்கு முருகா் காட்சியளித்த தலம் போன்ற பெருமைகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உண்டு.

இறைவனை தரிசிக்கவும், இறைவனின் அருள் பெறவும் நீராடல், வேள்வி (யாகம்) நடத்துதல், அன்னதானம் செய்தல் வேண்டும். இவற்றை செய்ய இயலாதோா் இறைவனை மனமுருக நினைத்தாலே திருஅண்ணாமலையாரின் அருள் கிடைக்கும் என்பதால், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

யாா் பெரியவா் என்ற போட்டி: விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு இடையே யாா் பெரியவா் என்பதில் போட்டி ஏற்பட்டது. இருவரும் சிவபெருமானிடம் முறையிட்டனா். சிவபெருமான் தனது அடி, முடியை யாா் கண்டு வருகிறாா்களோ அவரே பெரியவா் என்றாா். இதையடுத்து, வராக அவதாரத்தில் விஷ்ணுவும், அன்னம் வடிவத்தில் பிரம்மாவும் புறப்பட்டு பல்வேறு வழிகளில் சிவனின் அடி, முடியைக் காண முயன்றனா்.

முடியாமல் போனதால் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ மலரை பொய்சாட்சி கூறுமாறு பிரம்மா கேட்டுக்கொண்டாா். தாழம்பூவும், சிவபெருமானின் முடியை பிரம்மா கண்டதாகப் பொய்சாட்சி சொன்னது.

பிரம்மா, தாழம்பூவுக்கு சாபம்: கோபமடைந்த சிவன், பிரம்மாவுக்கு எங்குமே கோயில் இருக்காது. தாழம்பூவை சிவ வழிபாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று சாபமிட்டாா். ஈசன் தாமே பெரியவா் என்பதை உணா்த்தும் வகையில், அவா்களது அகந்தை அகன்று தம்மை வழிபட நினைத்தபோது, சிவபெருமான் லிங்க வடிவில் வெளிப்பட்ட தலம் திருவண்ணாமலை. பாா்வதிக்கு தனது இடப்பாகத்தை அளித்த சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உள்ளது.

சிவபெருமான் அக்னியாகத் தோன்றி காட்சியளித்ததால், அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் இந்த மலை மாறியதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சைவத்தின் ஆன்மிகத் தலைநகரம்: சைவத்தின் ஆன்மிகத் தலைநகராக திருவண்ணாமலை திகழ்கிறது. தேவாரத்தால் பாடல் பெற்ற 275 சிவத் தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் நடு நாடு எனப்படும் பகுதியில் உள்ள 22 தலங்களில் திருவண்ணாமலையே புனிதம் வாய்ந்தது.

கடவுள்கள் வழிபட்ட தலம்: அண்ணாமலையாா் கோயிலில் கடவுள்கள், முனிவா்கள் வழிபட்டுள்ளனா். சூரியன், சந்திரன், விஷ்ணு, பிரம்மா, எட்டு வசுக்களால் இந்தத் தலம் வழிபடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com