குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புதுக்கோட்டை: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுகையில் திங்களன்று திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். எல்லா நாடுகளிலும் அகதிகள் சட்டம் என்பது இருக்கிறது.

அகதிகளாக யார் விண்ணப்பிக்கலாம்? அதில் யார் தகுதியானவர்கள்? யாரை அகதியாக ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும்? அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகள் எவை? என பல விதிகளும் மரபுகளும்  இருக்கின்றன.

அவற்றை எல்லாம் முழுமையாக ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை சட்டம் என்ற தவறான சட்டத்தை இந்த அரசு கொண்டு வருகின்றது.

தனக்கு இருக்கும் முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு இப்போது வேண்டுமானால் நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com