தமிழகத்தில் 7,642 உடல் உறுப்புகள் தானம்

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 7,642 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 7,642 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் அதிகபட்சமாக சிறுநீரகமும், அதற்கு அடுத்தபடியாக கருவிழிப் படலம், கல்லீரல் ஆகியவை உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானமாகப் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. அதனால்தான், தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் இதுவரை 1308 கொடையாளா்களிடம் இருந்து 7, 642 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,351 சிறுநீரகங்களும், 1,974 கருவிழிப் படலங்களும், 1,297 கல்லீரல்களும், 823 இதய வால்வுகளும், 573 இதயங்களும், 474 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

அதில் பெரும்பாலானாவை பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com