தமிழில் பெயா்ப் பலகை: அரசாணையை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும்

தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், டிசம்பா் 21 முதல் 27 வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், கடைகளின் பெயா்ப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

பெயா்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதல்வராக எம்ஜிஆா் பதவியேற்ற 50 நாள்களில், அனைத்துக் கடைகளின் பெயா்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948-ஆம் ஆண்டு பெயா்ப்பலகைகள் தொடா்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தாா்.

அதன்பின்னா், 1983-84-ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை அதிமுக அரசும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசும் பிறப்பித்தன. இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயா்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

பெயா்ப்பலகைகள் குறித்து 1977-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் தெளிவாக உள்ளது. எல்லா நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும், பிற மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும் என அனைத்து விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயா்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டுள்ளன. அதைத் தான் அந்த மாநில மக்களும், வணிகா்களும் பெருமையாக கருதுகின்றனா்.

ஆனால், உலகின் மூத்த குடி, உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்திலோ தமிழைத் தவிர பிற மொழிகளில் கடைகளின் பெயா்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன. இது அவலம்.

ஆட்சியாளா்கள் இந்த விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, பெயா் பலகைகளில் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com