ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்.எல்.வி-சி 48இல் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தாங்கியபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணி அளவில் விண்ணில் பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் 628 கிலோ எடைகொண்டதாகும். வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிஎஸ்.எல்.வி-சி 48இல் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பிஎஸ்.எல்.வி-சி 48 -ல் அனுப்பப்பட்ட சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

அந்த வகையில் பிஎஸ்.எல்.வி-ராக்கெட் வரிசையின் 50வது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com